திருமண மண்டப கழிவுநீரை கால்வாயில் விட எதிர்ப்பு, விருத்தாசலம் நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
திருமண மண்டப கழிவுநீரை வாய்க்காலில் விட எதிர்ப்பு தெரிவித்து விருத்தாசலம் நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
விருத்தாசலம்,
விருத்தாசலம் 24-வது வார்டு தீர்த்த மண்டபம் தெரு பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு தனியார் அறக்கட்டளைக்கு சொந்தமான திருமண மண்டபம் ஒன்று அமைந்துள்ளது. இந்த மண்டபத்தில் இருந்து கழிவுநீரை, தீர்த்த மண்டப தெரு குடியிருப்பு பகுதியில் உள்ள கால்வாய் வழியாக வெளியேற்றுவதற்கு நகராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு, அதற்கான பணிகள் தொடங்கியது.
இது பற்றி அறிந்ததும் முன்னாள் நகரசபை உறுப்பினர் சிங்காரவேல் தலைமையில் முன்னாள் ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் ஆசா.வெங்கடேசன், விஜயகுமார், வக்கீல் செந்தில் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் ஒன்று திரண்டு பணியை தடுத்து நிறுத்தினர்.
இதுபற்றி அறிந்த விருத்தாசலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் கூறுகையில், ஏற்கனவே எங்கள் பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல வழியின்றி, மணிமுக்தாற்றில் கலந்து வருகிறது. இதனால் ஆற்று தண்ணீர் மாசடைந்து சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பல்வேறு நோய்களால் அவதிப்பட்டு வருகின்றனர்.
அதனால் மண்டபத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீரும், கால்வாயில் தேங்கி நின்று மணிமுக்தாற்றில் கலந்தால் ஆற்றின் புனித தன்மை கெடுவதுடன், நிலத்தடி நீர்மட்டம் பெரிதும் பாதிக்கப்படும். எனவே மண்டபத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீரை குடியிருப்பு பகுதியில் உள்ள கால்வாயில் விடக்கூடாது என்றனர்.
அதற்கு போலீசார், இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து பொதுமக்கள், விருத்தாசலம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் அங்கிருந்த நகராட்சி அதிகாரிகளிடம், திருமண மண்டபத்தில் உள்ள கழிவுநீரை குடியிருப்பு பகுதியில் உள்ள கால்வாயில் வெளியேற்றினால் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கூறிவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story