ஆம்பூர்பட்டி பகவதி அம்மன் கோவிலுக்கு பால்குடம்- காவடி எடுத்து வந்த பக்தர்கள்


ஆம்பூர்பட்டி பகவதி அம்மன் கோவிலுக்கு பால்குடம்- காவடி எடுத்து வந்த பக்தர்கள்
x
தினத்தந்தி 14 May 2019 4:00 AM IST (Updated: 14 May 2019 1:24 AM IST)
t-max-icont-min-icon

ஆம்பூர்பட்டியில் பகவதி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு திரளான பக்தர்கள் பால்குடம் மற்றும் காவடி எடுத்து கோவிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.

ஆவூர்,

விராலிமலை தாலுகா ஆவூர் அருகே உள்ள ஆம்பூர்பட்டியில் பகவதி அம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டு திருவிழா கடந்த 5-ந் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. இதையொட்டி அன்று இரவு ஊர் அருகே உள்ள ஊரணிக்கரையில் ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் கரகம் பாலித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

பின்னர் மேளதாளம், வாணவேடிக்கை முழங்க பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் புடைசூழ பூசாரியார் தலைமேல் கரகத்தை வைத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்தார். தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து தினமும் இரவில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து மண்டகப்படிதாரர்களின் அபிஷேக, ஆராதனை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

பக்தர்கள் நேர்த்திக்கடன்

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் இரவு பொதுமக்கள் கோவில் முன்பு பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். அப்போது அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. நேற்று காலை ஊரணிக்கரையில் இருந்து திரளான பக்தர்கள் பால்குடம், காவடி, அக்னிச்சட்டி எடுத்தும், அலகு குத்தியும் ஊர்வலமாக கோவிலுக்கு வந்து நேர்த்திக்கடனை செலுத்தினர். இதையடுத்து அம்மனுக்கு கிடாவெட்டு பூஜை நடைபெற்றது.

தொடர்ந்து இரவில் கோவில் முன்பு உள்ள கலையரங்கில் மதுரைபாண்டி எனும் புராண நாடகம் நடைபெற்றது. இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முளைப்பாரி ஊர்வலம் மற்றும் மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சியுடன் சித்திரை திருவிழா நிறைவுபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஆம்பூர்பட்டி கிராம மக்கள் செய்து வருகின்றனர். கோவில் திருவிழாவை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் மாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானவேல் தலைமையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். 

Next Story