குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி காலிக்குடங்களுடன் கலெக்டர் அலுவலகத்தில் திரண்ட மக்கள் முற்றுகை போராட்டம் நடத்த முயன்றதால் பரபரப்பு


குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி காலிக்குடங்களுடன் கலெக்டர் அலுவலகத்தில் திரண்ட மக்கள் முற்றுகை போராட்டம் நடத்த முயன்றதால் பரபரப்பு
x
தினத்தந்தி 13 May 2019 10:00 PM GMT (Updated: 13 May 2019 7:56 PM GMT)

குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி காலிக்குடங்களுடன் கலெக்டர் அலுவலகத்தில் திரண்ட கிராம மக்கள், முற்றுகை போராட்டம் நடத்த முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

தர்மபுரி,

தர்மபுரி அருகே உள்ள பெரிய குரும்பட்டி கிராமத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியில் கிராம மக்களின் தேவைக்காக ஆழ்துளை கிணறுகள் (போர்வெல்கள்) அமைக்கப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. தர்மபுரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக ஏற்பட்ட கடும் வறட்சி காரணமாக மேற்கண்ட கிராமத்திலும் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது.

இந்த கிராமமக்கள் சில கிலோமீட்டர் தூரம் சென்று குடிநீரை எடுத்து வர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு கோரி கிராமப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்து வந்தனர். இருந்தபோதிலும் அந்த கிராம பகுதியில் குடிநீர் பிரச்சினை தொடர்ந்து இருந்து வந்தது.

இந்த நிலையில் குரும்பட்டி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் நேற்று காலிக்குடங்களுடன் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி அந்த அலுவலக வளாகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முயன்றனர். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை சேர்ந்த அதிகாரிகள் முற்றுகை போராட்டம் நடத்த முயன்றவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அப்போது கிராமமக்கள் கூறுகையில், ஒகேனக்கல் குடிநீருக்காக 5 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பனந்தோப்பு கிராமத்திற்கு செல்கிறோம். அங்கு குழாயில் வெளியேறும் தண்ணீரை பிடித்து எடுத்து வந்து வடிகட்டி குடித்து வருகிறோம். எங்கள் கிராமத்திற்கு ஒகேனக்கல் குடிநீரை வழங்கவும், குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணவும் அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று தெரிவித்தனர்.

சம்பந்தப்பட்ட கிராம மக்களுக்கு ஒகேனக்கல் குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அப்போது அலுவலர்கள் மற்றும் போலீசார் உறுதியளித்தனர். இதைத்தொடர்ந்து கிராம மக்கள் முற்றுகை போராட்ட முயற்சியை கைவிட்டு திருப்பி சென்றனர். இதன்காரணமாக அந்த வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story