ராட்சத அலையில் அடித்து செல்லப்பட்ட கல்லூரி மாணவர் பிணமாக மீட்பு


ராட்சத அலையில் அடித்து செல்லப்பட்ட கல்லூரி மாணவர் பிணமாக மீட்பு
x
தினத்தந்தி 14 May 2019 4:30 AM IST (Updated: 14 May 2019 2:42 AM IST)
t-max-icont-min-icon

ராட்சத அலையில் அடித்து செல்லப்பட்ட கல்லூரி மாணவர் பிணமாக மீட்கப்பட்டார்.

ராஜாக்கமங்கலம்,

மதுரை மாவட்டம் அவனியாபுரத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியம். இவருடைய மகன் கிருஷ்ணகுமார் (வயது 19), கல்லூரி மாணவர். இவருடைய நண்பர் விக்னேஷ்(19). விக்னேஷ் மாமா குமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகே உள்ள கணபதிபுரம் பரமன்விளை பகுதியில் வசித்து வருகிறார்.

இதனால் கோடை விடுமுறைக்காக விக்னேஷ் மற்றும் கிருஷ்ணகுமார் உள்பட நண்பர்கள் 14 பேர் குமரி மாவட்டத்துக்கு வந்தனர். அவர்கள் நேற்று முன்தினம் மாலை ராஜாக்கமங்கலம் அருகே ஆயிரங்கால் பொழிமுகம் கடலில் குளிக்க சென்றனர். அப்போது திடீரென எழுந்த ராட்சத அலை கிருஷ்ணகுமார், நாராயணகுமார், சிவனாஷ், சுதர்சன் ஆகியோரை உள்ளே இழுத்து சென்றது. இதைகண்ட சக நண்பர்கள் உடனே போராடி நாராயணகுமார், சிவனாஷ், சுதர்சன் ஆகிய 3 பேரை மீட்டனர். ஆனால், கிருஷ்ணகுமாரை ராட்சத அலை அடித்து சென்று விட்டது. இதுபற்றி தகவல் அறிந்த குளச்சல் கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜாண் கிங்ஸ்லி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அலையில் சிக்கிய கிருஷ்ணகுமாரை மீனவர்கள் உதவியுடன் தேடினார்கள். ஆனால் கண்டு பிடிக்க முடியவில்லை. இரவு நேரம் என்பதால் தேடும் பணி நிறுத்தப்பட்டது.

பிணமாக மீட்பு

இந்தநிலையில் நேற்று 2-வது நாளாக மாணவர் கிருஷ்ணகுமாரின் உடலை தேடும் பணி நடைபெற்றது. இதுபற்றி தகவல் அறிந்த கிருஷ்ணகுமாரின் உறவினர்கள் அங்கு வந்து இருந்தனர். அப்போது, ராஜாக்கமங்கலம் துறை பகுதியில் ஒரு ஆண்பிணம் கரை ஒதுங்கியது. இதைகண்ட அப்பகுதி மீனவர்கள் குளச்சல் கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பிணத்தை பார்வையிட்டனர்.

அப்போது, அது ராட்சத அலையில் அடித்து செல்லப்பட்ட கிருஷ்ணகுமாரின் உடல் என்பது தெரியவந்தது. கிருஷ்ணகுமாரின் உடலை பார்த்து அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள், நண்பர்கள் கதறி அழுதனர். அதைதொடர்ந்து போலீசார் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கடல் அலையில் அடித்து செல்லப்பட்ட கல்லூரி மாணவர், பிணமாக மீட்கப்பட்டது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் குறித்து கடலோர பாதுகாப்பு குழும போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story