குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு


குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு
x
தினத்தந்தி 13 May 2019 11:23 PM GMT (Updated: 13 May 2019 11:23 PM GMT)

வெங்கிட்டிபாளையம், கண்டியன்கோவில் பகுதியில் குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

திருப்பூர்,

திருப்பூர் தாராபுரம் தொப்பம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட வெங்கிட்டிபாளையம் ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்தவர்கள் நேற்று காலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

எங்கள் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். குடிநீர் வசதிக்காக ஊராட்சி சார்பில் குழாய் அமைத்து கொடுத்தனர். ஆனால் அந்த குழாய், வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் வசிக்கும் பகுதியில் அமைத்துள்ளனர். நாங்கள் அங்கு சென்று குடிநீர் பிடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

ஆனால் அந்த பகுதிக்கு தண்ணீர் பிடிக்கச்சென்றால் எங்கள் மீது தீண்டாமையை கடைபிடிக்கிறார்கள். இதன் காரணமாக நாங்கள் குடிநீர் கிடைக்காமல் மிகவும் சிரமத்தை சந்தித்து வருகிறோம். தற்போது கோடைகாலம் தொடங்கி விட்டதால் குடிநீர் கிடைப்பதில் கடும் சிரமம் எங்களுக்கு ஏற்பட்டுள்ளது. எனவே உப்பாறு அணை பகுதியில் இருந்து செல்லும் பிரதான குடிநீர் குழாயில் இருந்து இணைப்பு கொடுத்து எங்கள் பகுதியில் குழாய் வசதியை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.

திருப்பூர் தெற்கு தாலுகாவுக்கு உட்பட்ட சின்னாரியம்பட்டி, கண்டியன்கோவில் பகுதியை சேர்ந்தவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

எங்கள் பகுதியில் ஆதிதிராவிட சமூகத்தை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் வாரத்துக்கு ஒருநாள் மட்டுமே குழாய் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. அதுவும் எங்களுக்கு போதுமான அளவு கிடைப்பதில்லை. 1 குடம் தண்ணீரை ரூ.4-க்கு வாங்கி பயன்படுத்தி வருகிறோம். ஏழை தொழிலாளர்களான எங்களுக்கு பணம் கொடுத்து குடிநீர் பெற முடியவில்லை. கோடைகாலமாக இருப்பதால் குடிநீர் தேவை அதிகரித்துள்ளது. எனவே எங்கள் பகுதிக்கு குடிநீர் வசதி ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.


Next Story