சுசீந்திரம் அருகே மனைவியை வெட்டி கொல்ல முயன்ற ரவுடி கைது


சுசீந்திரம் அருகே மனைவியை வெட்டி கொல்ல முயன்ற ரவுடி கைது
x
தினத்தந்தி 15 May 2019 3:45 AM IST (Updated: 14 May 2019 8:11 PM IST)
t-max-icont-min-icon

சுசீந்திரம் அருகே மனைவியை வெட்டி கொல்ல முயன்ற ரவுடியை போலீசார் கைது செய்தனர்.

மேலகிருஷ்ணன்புதூர்,

சுசீந்திரம் அருகே செங்கட்டி பாலம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 44). பிரபல ரவுடியான இவர் மீது சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் கொலை முயற்சி மற்றும் கஞ்சா விற்பனை உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. இவருடைய மனைவி ஜெயா (43). இவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் கிருஷ்ணன்–ஜெயா இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது, ஆத்திரமடைந்த கிருஷ்ணன் அரிவாளால் ஜெயாவை சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் ஜெயா ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அப்போது, கிருஷ்ணன் அவர்களையும் அரிவாளை காட்டி மிரட்டல் விடுத்து தப்பி ஓடி விட்டார்.

அதன்பிறகு அவர்கள் ஜெயாவை மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், இதுகுறித்து சுசீந்திரம் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும், கிருஷ்ணன் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.

Next Story