“பா.ஜனதாவுடன் ஸ்டாலின் பேசிவருவது உண்மை தான்” - தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி


“பா.ஜனதாவுடன் ஸ்டாலின் பேசிவருவது உண்மை தான்” - தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி
x
தினத்தந்தி 14 May 2019 11:15 PM GMT (Updated: 14 May 2019 6:56 PM GMT)

“தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பா.ஜனதாவுடன் பேசி வருவது உண்மைதான்“ என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

தூத்துக்குடி,

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் மோகனை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று தூத்துக்குடிக்கு வந்தார். அவர் தூத்துக்குடி அ.தி.மு.க. தலைமை தேர்தல் காரியாலயத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் மு.க.ஸ்டாலினை சந்தித்து உள்ளார். அதன்பின்னர் அ.தி.மு.க.வில் குழப்பம், பா.ஜனதாவில் குழப்பம் இருப்பது போன்று கூறி வருகிறார்கள். அப்படி எந்த குழப்பமும் இல்லை. நாங்கள் தான் தேர்தலில் வெற்றி பெறப் போகிறோம்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பதவி பசியில் இருக்கிறார். அவர் தூத்துக்குடிக்கு வந்தால் பதனீர் கிடைக்கும். ஆனால் பதவி கிடைக்காது. ஒட்டுமொத்த இந்தியாவில் ஒரு தொகுதியில் தேர்தல் ரத்தாகி உள்ளது என்றால் அது வேலூர் தொகுதி தான். அதற்கு காரணம் தி.மு.க. வேட்பாளர் மற்றும் தி.மு.க. பொருளாளர் தான்.

தேர்தல் முடிந்த பின்னர் ஆட்சி மாற்றம் வரும். பதவியில் அமர்ந்து விடலாம் என மு.க.ஸ்டாலின் கனவு கண்டு கொண்டு இருக்கிறார். இன்றைய காலக்கட்டத்தில் ஒரு நிலையான ஆட்சி வேண்டும். மத்தியிலும் சரி, மாநிலத்திலும் சரி சாமானிய மக்களுக்கான ஆட்சி வேண்டும்.

கமல்ஹாசனின் சர்ச்சைக்குரிய கருத்தால் அவரின் கட்சிக்கான அங்கீகாரம் ரத்து செய்யப்பட வேண்டும். அவரது தேர்தல் பிரசாரம் முடக்கப்பட வேண்டும். நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா இந்தியா முழுவதும் வெற்றிபெறும்.

அமைச்சர் ஜெயக்குமார் கூறும்போது, மு.க.ஸ்டாலின் பா.ஜனதாவிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவித்து உள்ளார். அது உண்மை தான். ஒருபக்கம் ராகுல்காந்தி, மற்றொரு பக்கம் சந்திரசேகர ராவ் மற்றும் இன்னொரு பக்கம் மோடியுடன் பேசி வருகிறார். அவர்கள் பின்புறமாகத்தான் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள்.

பா.ஜனதா வெற்றி பெறப்போகிறது. 23-ந் தேதி ஏதாவது ஒரு மாற்றத்தை கொண்டு வர முடியுமா? என்று பார்க்கிறார். மோடி மீண்டும் பிரதமராக வர உள்ளார். மு.க.ஸ்டாலின், சந்திரசேகர ராவ் சந்திப்பால், காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் அழகிரிதான் பதற்றத்தில் இருப்பார். இந்த சந்திப்பு மாற்றத்தை ஏற்படுத்தப் போவது இல்லை. எத்தனை அணிகள் ஏற்பட்டாலும், அது பா.ஜனதாவுக்குதான் சாதகமாக இருக்கும்.

3-வது அணிக்கு வாய்ப்பு உள்ளதா? என்பதை மு.க.ஸ்டாலின் மறுக்கவில்லை. ராகுல்தான் பிரதமர் வேட்பாளர் என்று ஏன் கூற மறுக்கிறார். அவர் நிறம் மாறிக் கொண்டு இருக்கிறார். அங்கு ஒரு நிறம், பாஜனதாவிடம் ஒரு நிறம், காங்கிரசிடம் ஒரு நிறத்தில் உள்ளார். தி.மு.க. நிறம் மாறும் கட்சி என்பது அனைவருக்கும் தெரிந்தது தான். அதனால் இன்றைக்கு மு.க.ஸ்டாலின் நிறம் மாறிக் கொண்டு இருக்கிறார் என்பது தெளிவான வெளிப்பாடு. ராகுல் காந்தியை பிரதமராக நிறுத்தியதற்கு முதலில் வருத்தப்பட போவதும் மு.க.ஸ்டாலின் தான். அரசியலில் தப்புக்கணக்கு போடுவதற்கே தமிழகத்தில் ஒரு தலைவர் இருக்கிறார் என்றால் அது மு.க.ஸ்டாலின்தான்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story