புதுக்கோட்டை முன்னாள் எம்.பி. ராஜா பரமசிவம் மரணம்


புதுக்கோட்டை முன்னாள் எம்.பி. ராஜா பரமசிவம் மரணம்
x
தினத்தந்தி 14 May 2019 11:15 PM GMT (Updated: 14 May 2019 7:47 PM GMT)

புதுக்கோட்டை முன்னாள் எம்.பி. ராஜா பரமசிவம் உடல்நலக்குறைவால் மரணமடைந்தார்.

கீரமங்கலம்,

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் மேற்கு குருவாடி கிராமத்தை சேர்ந்தவர் ராஜாபரமசிவம்(வயது 58). வக்கீல். முன்னாள் எம்.பி.யான இவருக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் இறந்தார்.

அவருடைய உடல் சொந்த ஊரான குருவாடி கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டு, இன்று(புதன்கிழமை) அடக்கம் செய்யப்படுகிறது. அவருடைய மறைவுக்கு பல்வேறு கட்சியினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மாணவராக இருந்தபோதே ராஜாபரமசிவத்திற்கு அ.தி.மு.க. மீது பற்று ஏற்பட்டது. இதையடுத்து அந்த கட்சியில் சேர்ந்து பணியாற்றினார். கடந்த 1998-ம் ஆண்டு புதுக்கோட்டை நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்டு, வெற்றி பெற்றார். அப்போது மாவட்ட அ.தி.மு.க. செயலாளராகவும் இருந்தார். 1999-ம் ஆண்டு பாராளுமன்றம் கலைக்கப்பட்டதால் ஒரு வருடத்தில் எம்.பி. பதவியை இழந்தார்.

பின்னர் 2006-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால், சுயேச்சையாக களமிறங்கினார். அதனால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து தி.மு.க.வில் இணைந்தார். 2012-ம் ஆண்டு புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட வாய்ப்பு கேட்டார். அப்போது தி.மு.க. தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தது. இதனால் மீண்டும் அ.தி.மு.க.வில் இணைந்தார். ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் ஜெ.தீபா அணிக்கு மாறினார். சில வருடங்களாக விவசாயம், தொழில் போன்றவற்றை கவனித்து வந்தார். இவருக்கு சுசீலா என்ற மனைவியும், தனேந்திரராஜ் என்ற மகனும், காருண்யா என்ற மகளும் உள்ளனர். மகளுக்கு கடந்த மாதம் தான் திருமணம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story