மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதியது: மின்வாரிய ஊழியர் பலி கிள்ளியூர் அருகே பரிதாபம்


மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதியது: மின்வாரிய ஊழியர் பலி கிள்ளியூர் அருகே பரிதாபம்
x
தினத்தந்தி 15 May 2019 4:30 AM IST (Updated: 15 May 2019 1:53 AM IST)
t-max-icont-min-icon

கிள்ளியூர் அருகே மின் கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதியதில் மின்வாரிய ஊழியர் பரிதாபமாக பலியானார். மற்றொருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கருங்கல்,

கருங்கல் அருகே தொலையாவட்டம் செம்முதல் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 47). இவர் தொலையாவட்டம் பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார்.

கருங்கல் மாங்கரை ஆட்டுதொலுவட்டம் பகுதியை சேர்ந்தவர் நேசையன். இவருடைய மகன் ஷைஜின் ராஜூ (வயது 24). இவரும் அதே மின்வாரியத்தில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வருகிறார்.

நேற்று மதியம் ஷைஜின் ராஜூவும், சுரேஷ்குமாரும் ஒரே மோட்டார் சைக்கிளில் புதுக்கடை- கருங்கல் சாலையில் தொலையாவட்டம் நோக்கி சென்றனர். மோட்டார் சைக்கிளை ஷைஜின் ராஜூ ஓட்டினார். சுரேஷ்குமார் பின்னால் அமர்ந்திருந்தார். அவர்கள் கிள்ளியூர் அருகே கஞ்சிகரைவிளை பகுதியில் உள்ள திருப்பத்தில் சென்ற போது திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்ற மின் கம்பத்தின் மீது மோதியது.

இதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். இந்த விபத்தில் சுரேஷ்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். ஷைஜின் ராஜூ உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். உடனே, அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், அவரை மேல்சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி கருங்கல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த விபத்தில் பலியான சுரேஷ்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விபத்தில் பலியான சுரேஷ்குமாருக்கு நீலாகுமாரி என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர். மேலும், சுரேஷ்குமார் புதிதாக வீடு கட்டியிருந்தார். இந்த வீட்டில் கடந்த 10-ந்தேதி தான் புதுமனை புகுவிழா நடத்தி குடியேறினார். இந்தநிலையில் சுரேஷ்குமார் விபத்தில் இறந்த சம்பவம் குடும்பத்தினர், உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

Next Story