திருவாடானை அரசு ஆஸ்பத்திரியில் குடிநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்கும் பணி முடக்கம்; நடவடிக்கை எடுக்கப்படுமா?


திருவாடானை அரசு ஆஸ்பத்திரியில் குடிநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்கும் பணி முடக்கம்; நடவடிக்கை எடுக்கப்படுமா?
x
தினத்தந்தி 15 May 2019 3:23 AM IST (Updated: 15 May 2019 3:23 AM IST)
t-max-icont-min-icon

திருவாடானை அரசு ஆஸ்பத்திரியில் குடிநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்கும் பணி ஓராண்டாக முடக்கம் அடைந்துள்ளதால் நோயாளிகள் மற்றும் அவர்களின் உறவினர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

தொண்டி,

திருவாடானை அரசு ஆஸ்பத்திரிக்கு தினமும் சுமார் 300 முதல் 450-க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் வந்து சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். மேலும் சராசரியாக சுமார் 40 உள் நோயாளிகள் தினமும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 5 மருத்துவர்கள் பணியில் உள்ளனர். இங்கு வரும் நோயாளிகள் மற்றும் பொதுமக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் வகையில் திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் குடிநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக ஆஸ்பத்திரி வளாகத்தில் புதிதாக ஆழ்குழாய் அமைக்கப்பட்டு மின் இணைப்பு வழங்கப்பட்டது.

இதேபோல தண்ணீரை சுத்திகரிப்பு செய்யும் கருவிகள் வைப்பதற்காக தனியாக கூடம் அமைக்கப்பட்டது. ஆனால் கடந்த ஓராண்டுக்கும் மேலாக சுத்திகரிப்பு கருவிகள் இங்கு கொண்டு வரப்படாததால் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நோயாளிகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்குவதற்கு வாய்ப்பில்லாமல் இருந்து வருகிறது.

கடும் குடிநீர் பிரச்சினை இருந்து வரும் இந்த நேரத்தில் இந்த சுத்திகரிப்பு மையம் செயல்படத் தொடங்கினால் இங்கு வரும் நோயாளிகள், பொதுமக்கள் பெரிதும் பயனடைவார்கள்.

எனவே ஓராண்டாக கிடப்பில் போடப்பட்டுள்ள சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணியை உடனே தொடங்கி குடிநீர் சுத்திகரிப்பு மையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகமும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.

Next Story