லூர்துமாதா ஆலய விழாவின்போது தேர் மீது மின்சாரம் பாய்ந்து 2 பேர் பலி : ஒருவர் படுகாயம்


லூர்துமாதா ஆலய விழாவின்போது தேர் மீது மின்சாரம் பாய்ந்து 2 பேர் பலி : ஒருவர் படுகாயம்
x
தினத்தந்தி 15 May 2019 11:15 PM GMT (Updated: 15 May 2019 4:07 PM GMT)

செங்கம் அருகே லூர்துமாதா ஆலய விழாவில் தேர்பவனி நடந்தபோது அதன் மீது மின்சாரம் பாய்ந்ததில் 2 பேர் பலியானார்கள்.

செங்கம், 

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள அல்லியந்தல் கிராமத்தில் தூய லூர்துமாதா ஆலயம் உள்ளது. இங்கு ஆலய ஆண்டு விழா நடந்தது. விழாவை முன்னிட்டு நேற்று முன் தினம் இரவு லூர்து மாதா தேர் வீதி உலா வந்தது. தேரை பார்க்கவும், மாதாவை வழிபடவும் கிறிஸ்தவர்கள் திரளானவர்கள் கூடி நின்றனர்.

தேரானது, மாட்டுவண்டியில் 15 அடி உயரத்தில் அலங்கரிக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டிருந்தது. தேர் அல்லியந்தலில் உள்ள வண்ணாரப்பேட்டை நோக்கி ஊர்வலமாக சென்றது. இரவு என்பதால் மேலே அதிக மின் அழுத்தம் கொண்ட மின்சார வயர்கள் இருப்பதை யாரும் அறியவில்லை. இந்த நிலையில் தேரை அதே கிராமத்தை சேர்ந்த அன்பரசு (வயது 50), ஜெபராஜ் (45) உள்ளிட்டோர் இழுத்து வந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக மேலே இருந்த மின்சார வயர்கள் தேரின் மேல் பகுதியில் இருந்த சிலுவை மீது உரசியது. அதிலிருந்து கசிந்த மின்சாரம் தேர்மீது பாய்ந்தது. அப்போது தேரை இழுத்துச்சென்ற அன்பரசு மற்றும் ஜெபராஜ் ஆகியோர் மின்சாரம் தாக்கியதில் அவர்கள் பலியானார்கள்.

மேலும் அதே கிராமத்தை சேர்ந்த புளோமின்ராஜ் (45) என்பவர் படுகாயமடைந்தார். மேலும் ஒரு சிலருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது. படுகாயமடைந்த புளோமின்ராஜை அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் அன்பரசு, ஜெபராஜ் ஆகியோரின் உடலை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இறந்த அன்பரசு கேபிள் டிவி ஆபரேட்டராக பணியாற்றி வந்தார். அவருக்கு அன்னபூர்ணி (40) என்ற மனைவியும், எழில்ரோசாரியோ (18), என்ற மகனும், ரோகினி (16), நந்தினி (14) மற்றும் மற்றொரு மகள் உள்ளனர்.

ஜெபராஜ் கூலி வேலை செய்து வந்தார். அவருக்கு பிளோமினா (35) என்ற மனைவியும், ஆசிர் (10) என்ற மகனும், மோனிகா (13) என்ற மகளும் உள்ளனர்.

திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த புளோமின்ராஜ் விபத்து குறித்து கூறுகையில், ‘‘இரவு நேரத்தில் நாங்கள் தேரை இழுத்து வந்தோம். அப்போது அங்கு எதிர்பாராத விதமாக தேர் மீது மேலே சென்ற மின்வயர்கள் உரசி மின்சாரம் பாய்ந்தது. மின்சாரம் பாய்ந்தபோது ‘மாதாவே எங்களை காப்பாற்று’ என்று கத்தினேன். பின்னர் சுயநினைவை இழந்து விட்டேன். அதன் பின்னர் மருத்துவமனையில் இருக்கும் போது தான் எனக்கு நினைவு திரும்பியது’’ என்றார்.

இந்த சம்பவம் செங்கம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story