தோழியின் பிறந்தநாள் விழாவில் தகராறு, வாலிபர்களை விடுதியில் அடைத்து வைத்து தாக்கியதாக 9 பேர் கைது
தோழியின் பிறந்தநாள் விழாவில் ஏற்பட்ட தகராறில் வாலிபர்களை விடுதி அறையில் அடைத்து வைத்து தாக்கியதாக 9 பேரை போலீசார் கைது செய்தனர்.
சிங்காநல்லூர்,
கோவை சுண்டக்காமுத்தூர் அருகே உள்ள ராமசெட்டிபாளையத்தை சேர்ந்தவர் அஜித் (வயது 21). தனியார் நிறுவன ஊழியர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் தனது தோழி ஒருவரின் பிறந்தநாளை அந்த பகுதியில் ஒரு வீட்டில் வைத்து தனது நண்பர்களான விஜி, ரஞ்சித், விக்னேஷ் ஆகியோருடன் சேர்ந்து கொண்டாடினார்.
இந்த விழாவுக்கு சிங்காநல்லூர் செல்லாண்டியம்மன் கோவில் வீதியை சேர்ந்த கோகுல்ராஜ் (24), தனது தோழியுடன் வந்து இருந்தார். அங்குள்ள தங்கும் விடுதியில் கோகுல்ராஜ் மேலாளராக பணியாற்றி வந்தார். பிறந்தநாள் விழாவில் நடந்த மது விருந்தில் அஜித்துக்கும், கோகுல்ராஜுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அஜித், கோகுல்ராஜின் காரை கம்பியால் சேதப்படுத்தியதாக தெரிகிறது.
எனவே காரை சரிசெய்ய ரூ.80 ஆயிரம் செலவாகும் அதனை கொடுக்கும்படி அஜித்திடம், கோகுல் ராஜ் கேட்டார். பணம் தருவதாக அஜித் ஒப்புக்கொண்டார். ஆனால் நீண்ட நாட்கள் ஆகியும் அவர் பணம் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த கோகுல்ராஜ் காரை சேதப்படுத்தியது சம்பந்தமாக பேச வேண்டும் சிங்காநல்லூருக்கு வாருங்கள் என்று அஜித்திடம் கூறினார்.
இதனையடுத்து அஜித் தனது நண்பர்களுடன் தங்கும் விடுதிக்கு சென்றார். அங்கு அஜித் மற்றும் அவரது நண்பர்கள் 4 பேரை கோகுல்ராஜ் தனது நண்பர்கள் 8 பேருடன் சேர்ந்து ஒரு நாள் முழுவதும் அறையில் அடைத்து வைத்து அடித்து உதைத்து கொடுமைப்படுத்தியதாக கூறப் படுகிறது.
அங்கு இருந்து தப்பி வந்த அஜித் இது குறித்து சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதனால் ஆத்திரம் அடைந்த கோகுல்ராஜ் ‘எதற்காக போலீசில் புகார் செய்தாய்?’ என அஜித் மற்றும் அவரது நண்பர்களை மீண்டும் தாக்கி கத்தியை காட்டி பணத்தை பறித்து, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து மீண்டும் அஜித், சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அஜித் மற்றும் அவரது நண்பர்களை தாக்கிய இருகூரை சேர்ந்த சுமேஷ் (23), மசக்காளிபாளையத்தை சேர்ந்த மதன் (23), உப்பிலிபாளையத்தை சேர்ந்த கார்த்தி (24), இருகூரை சேர்ந்த சிவக்குமார் (24), மசக்காளிபாளையத்தை சேர்ந்த மனோஜ்குமார் (25), வரதராஜபுரத்தை சேர்ந்த முஜிபூர் (21), சங்கர் (22), கோகுல்ராஜ் (24), சிம்சன் (20) ஆகியோரை கைது செய்தனர்.
இவர்களில் சுமேஷ், மதன், கார்த்தி ஆகியோர் மீது ஏற்கனவே கொலை, கொள்ளை, வழிப்பறி போன்ற வழக்குகள் உள்ளது. கைதானவர்களிடம் இருந்து ரூ.6ஆயிரம், 2 கத்தி, 2 ஏ.டி.எம். கார்டு, செல்போன்கள், ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் 9 பேரையும் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story