ஈரோடு மாவட்டத்தில் பல இடங்களில் சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை; ஊஞ்சலூரில் ஆலங்கட்டி மழை பெய்தது


ஈரோடு மாவட்டத்தில் பல இடங்களில் சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை; ஊஞ்சலூரில் ஆலங்கட்டி மழை பெய்தது
x
தினத்தந்தி 15 May 2019 10:45 PM GMT (Updated: 15 May 2019 9:08 PM GMT)

ஈரோடு மாவட்டத்தில் பல இடங்களில் சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. ஊஞ்சலூரில் ஆலங்கட்டி மழை பெய்தது.

அம்மாபேட்டை,

ஈரோடு மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக பகலில் வெயில் சுட்டெரிக்கிறது. மாலையில் சூறாவளிக்காற்றுடன் மழை பெய்கிறது.

இந்தநிலையில் அம்மாபேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதல் மாலை வரை வெயில் கொளுத்தியது. மாலை 6 மணி அளவில் வானம் மப்பும், மந்தாரமாக காணப்பட்டது. பின்னர் சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழை சுமார் 1 மணி நேரம் கொட்டித்தீர்த்தது. இதனால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. அம்மாபேட்டை அருகே கொமராயனூர் பிரிவு பகுதியில் இடி–மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதில் மின்னல் தாக்கியதில் அதேப்பகுதியை சேர்ந்த ராம்ஜி என்பவருக்கு சொந்தமான தென்னை மரம் தீப்பிடித்து எரிந்தது.

இதேபோல் உமாரெட்டியூர் பிரிவு பகுதியில் வீசிய சூறாவளிக்காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியால் புளியமரம் ஒன்று வேரோடு சாய்ந்து நடுரோட்டில் விழுந்தது. இதனால் பவானி–மேட்டூர் ரோட்டில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்ததும் அம்மாபேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, போக்குவரத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். மேலும் நெடுஞ்சாலைப்பணியாளர்கள் அங்கு சென்று, ரோட்டில் விழுந்து கிடந்த மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

கோனேரிப்பட்டியில் ஒரு மரம் வேரோடு சாய்ந்து அந்தப்பகுதியில் உள்ள ஒரு கடை மீது விழுந்தது. அப்போது கடையில் யாரும் இல்லாததால் உயிர்ச்சேதம் இல்லை. இதேபோல் அம்மாபேட்டை அருகே சக்தி நகர் பகுதியில் சூறாவளிக்காற்றுடன் மழை பெய்தது. இதில் சூறாவளிக்காற்று வீசியதில் மின்கம்பம் ஒன்று முறிந்து ரோட்டில் சாய்ந்து கிடந்தது.

இதனால் அந்தப்பகுதியில் மின்தடை ஏற்பட்டது. இதுபற்றிய தகவல் அறிந்ததும் மின்வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். ஊமாரெட்டியூர், குறிச்சி, நெரிஞ்சிப்பேட்டை, பூனாச்சி, குருவரெட்டியூர் ஆகிய பகுதிகளில் நேற்று மாலை 6 முதல் இரவு 7 மணி வரை சூறாவளிக்காற்றுடன் கனமழை பெய்தது. பின்னர் மழை தூறிக்கொண்டே இருந்தது.

அந்தியூர், பர்கூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை 6 மணி அளவில் லேசான மழை பெய்யத்தொடங்கியது. மாலை 6.30 மணி அளவில் சூறாவளிக்காற்றுடன் பலத்த மழையாக கொட்டியது. இந்த மழை சுமார் 30 நிமிடம் வெளுத்து வாங்கியது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் தாழ்வான இடங்களில் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது.

கோபி, தாளவாடி பகுதிகளிலும் நேற்று மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை கொட்டித்தீர்த்தது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள்.

ஊஞ்சலூரில் நேற்று இரவு 7 மணி அளவில் மழை பெய்யத்தொடங்கியது. திடீரென ஆலங்கட்டி மழை பெய்தது. பனிக்கட்டிகள் சிறுசிறு துண்டுகளாக தரையில் விழுந்தன. சுமார் 10 நிமிடம் பெய்த ஆலங்கட்டி மழை பின்னர் பலத்த மழையாக மாறியது. சுமார் 20 நிமிடம் கொட்டித்தீர்த்தது.

இதேபோல் நடுப்பாளையம், கொளாநல்லி பகுதியிலும் நேற்று இரவு 7 மணிக்கு தொடங்கிய மழை சுமார் 30 நிமிடம் நிற்காமல் பெய்தது.

கொடுமுடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு 7 மணி முதல் 7.30 மணி வரை சூறாவளிக்காற்றுடன் மழை பெய்தது.


Related Tags :
Next Story