மாவட்ட செய்திகள்

வடுவூர் ஏரியை ரூ.3 கோடியில் தூர்வாரும் பணி கூடுதலாக தண்ணீர் தேக்க நடவடிக்கை + "||" + The drainage of the Vaduvur lake by Rs 3 crore is also a water stagnation activity

வடுவூர் ஏரியை ரூ.3 கோடியில் தூர்வாரும் பணி கூடுதலாக தண்ணீர் தேக்க நடவடிக்கை

வடுவூர் ஏரியை ரூ.3 கோடியில் தூர்வாரும் பணி கூடுதலாக தண்ணீர் தேக்க நடவடிக்கை
வடுவூர் ஏரியை ரூ.3 கோடி செலவில் தூர்வாரும் பணி தொடங்கி உள்ளது. இதன் மூலம் ஏரியில் கூடுதலாக தண்ணீர் தேக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
வடுவூர்,

திருவாரூர் மாவட்டம் வடுவூர் கிராமத்தில் உள்ளது வடுவூர் ஏரி. டெல்டா மாவட்டங்களில் உள்ள குறிப்பிடத்தக்க நீர் ஆதாரங்களில் வடுவூர் ஏரியும் ஒன்று. வடுவூர் ஏரி மூலமாக 10 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. 316 ஏக்கர் பரப்பளவு கொண்ட வடுவூர் ஏரி, பறவைகள் சரணாலயமாக திகழ்கிறது. உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் அரிய வகை பறவைகள் வடுவூர் ஏரிக்கு வருவதை வழக்கமாக கொண்டிருக்கின்றன.


நவம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை வெளிநாட்டு பறவைகள் வடுவூர் ஏரி பகுதியில் உள்ள மரங்களில் கூடுகட்டி தங்கி இருந்து இரை தேடுவதை வழக்கமாக கொண்டுள்ளன. பெரும்பாலான பறவைகள் இனப்பெருக்கத்துக்காக வடுவூர் ஏரிக்கு வருவதாக பறவை ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இங்கு உள்ள மரங்களில் தங்கி இனப்பெருக்கம் செய்யும் பறவைகள் ஏரியில் தண்ணீர் குறைந்தவுடன் தங்கள் குஞ்சுகளுடன் மார்ச் மாதத்துக்கு பின்னர் தங்கள் தாயகம் நோக்கி சிறகடித்து பறக்க தொடங்கி விடுகின்றன.

வடுவூர் ஏரியை முழுமையாக தூர்வாரி 30 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதன் காரணமாக ஏரியின் கொள்ளளவு குறைந்துவிட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கிறார்கள். கடந்த ஆண்டு குடிமராமத்து திட்டத்தின்கீழ் வடுவூர் ஏரியில் இருந்து விவசாயிகள் மண் எடுத்துக்கொள்ள அரசு அனுமதி வழங்கியது.

இதனால் மகிழ்ச்சி அடைந்த விவசாயிகள், வடுவூர் ஏரியில் இருந்து மண் அள்ளி சென்றனர். ஏரியில் 15 ஏக்கர் பரப்பளவில் ஒரு மீட்டர் ஆழத்துக்கு விவசாயிகள் மண் அள்ளி சென்றுள்ளனர். ஏரியில் முழுமையான அளவுக்கு தூர்வாரும் பணிகளை மேற்கொண்டு, ஏரியின் ஆழத்தை அதிகரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.

ஏரியின் ஆழம் குறைந்து விட்டதால் அதையொட்டி உள்ள ஷட்டரை திறக்கும்போது ஏரியில் தேக்கி வைக்கப்பட்டிருக்கும் தண்ணீர் முழுவதும் ஏரி அருகே உள்ள ஆற்றுக்கு சென்று விடுகிறது. எனவே ஏரியை தூர்வாரி ஆழத்தை அதிகரித்தால் மட்டுமே தண்ணீரை நிரந்தரமாக தேக்கி வைத்துக்கொள்ள முடியும் என்ற நிலை ஏற்பட்டு உள்ளது.

இந்த நிலையில் வடுவூர் ஏரியை நபார்டு வங்கி நிதி உதவி திட்டத்தின் கீழ் ரூ.3 கோடியே 5 லட்சம் செல்வில் தூர்வார திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கி உள்ளன. அதேபோல வடுவூர் ஏரியை தூர்வாருதல் மற்றும் புனரமைத்தல் திட்டத்தின் கீழ் ஏரியின் தென்மேற்கு பகுதி கரையில் 80 மீட்டர் தூரத்திற்கு கான்கிரீட் சுவர் எழுப்பும் பணியும் நடக்கிறது.

அடுத்த மாதத்துக்குள் (ஜூன்) தூர்வாரும் பணி முழுமை அடையும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தூர்வாரும் பணியையொட்டி ஏரியில் இருந்து வெட்டி எடுக்கப்படும் மண் வடுவூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், மின்வாரியம், விளையாட்டு மைதானம் ஆகிய இடங்களில் கொட்டப்பட்டு வருகிறது. ஏரியின் கரைகளை பலப்படுத்தவும் மண் பயன்படுத்தப்படுகிறது.

ஏரியை முழுமையாக தூர்வாருவதன் மூலம் கூடுதலாக தண்ணீரை தேக்கி வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உள்ளனர். ஏரியில் எப்போதும் தண்ணீர் தேங்கி இருந்தால் கூடுதலாக பறவைகள் வருவதற்கும் வாய்ப்பு ஏற்படும். விவசாய பாசனத்துக்கு தேவையான தண்ணீரும் கிடைக்கும் என்பதால் விவசாயிகள், பறவை ஆர்வலர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.