தேனி நாடாளுமன்ற தொகுதியில் வாக்குப்பதிவு செய்ததை முகநூலில் வெளியிட்டவர் மீது வழக்கு
தேனி நாடாளுமன்ற தொகுதியில் வாக்குப்பதிவு செய்ததை முகநூலில் வெளியிட்டவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
போடி,
போடி தியாகி போஜன் தெருவை சேர்ந்தவர் அழகர்சாமி (வயது 47). கடந்த மாதம் 18-ந்தேதியன்று இவர், தேனி நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தலில் வாக்களித்தார். போடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி எண்-55-ல் தனது வாக்கினை பதிவு செய்தார். அப்போது அவர் தான் வாக்குப்பதிவு செய்ததை வீடியோவில் பதிவு செய்தார்.
பின்னர் அதனை முகநூலில் வெளியிட்டார். இந்த வீடியோ வைரலாக பரவியது. இதுகுறித்து அந்த வாக்குச்சாவடியில் தேர்தல் அதிகாரியாக பணியாற்றிய கல்லூரி பேராசிரியை ஜெமிமா பிளாரன்ஸ் போர்ஜியா (49) என்பவர் போடி நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது:-
கடந்த மாதம் 18-ந்தேதியன்று போடி சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி எண்-55-ல் தேர்தல் அதிகாரியாக பணிபுரிந்தேன். அந்த வாக்குச்சாவடியில் அழகர்சாமி ஓட்டு போட்டார். அப்போது வாக்குப்பதிவு எந்திரத்தின் அருகே நின்று செல்போனை இயக்கி கொண்டிருந்தார். இதனை கண்ட நான் அவரை கண்டித்தேன்.
அப்போது அவர், தனது செல்போனில் அழைப்பு வந்ததாக கூறினார். மேலும் என்னை ஒருமையில் அவர் பேசினார். இந்தநிலையில் தான் வாக்குப்பதிவு செய்ததை அவர் வீடியோவாக பதிவு செய்து அதனை முகநூலில் வெளியிட்டுள்ளார். இது, தேர்தல் விதியை மீறிய செயல் ஆகும். எனவே அழகர்சாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு ஜெமிமா பிளாரன்ஸ் போர்ஜியா கூறியிருந்தார். அதன்பேரில் தேர்தல் விதிகளை மீறியது, அவதூறாக பேசியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அழகர்சாமி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story