அரியநாயகிபுரம் குடிநீர் திட்டப்பணி: நெல்லையில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்


அரியநாயகிபுரம் குடிநீர் திட்டப்பணி: நெல்லையில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்
x
தினத்தந்தி 16 May 2019 4:39 AM IST (Updated: 16 May 2019 4:39 AM IST)
t-max-icont-min-icon

அரியநாயகிபுரம் குடிநீர் திட்டப்பணிக்காக நெல்லையில் இன்று (வியாழக்கிழமை) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

நெல்லை,

நெல்லை மாநகராட்சிக்கு தாமிரபரணி ஆற்றின் அரியநாயகிபுரம் அணைக்கட்டு நீர்த்தேக்க பகுதியில் இருந்து நாளொன்றுக்கு 50 மில்லியன் லிட்டர் தண்ணீர் ராட்சத குழாய்கள் மூலம் கொண்டுவரப்படுகிறது. இதற்காக பேட்டை காமராஜர் பள்ளி, மாநகராட்சி வளாக பகுதியில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

அங்கு குடிநீர் சுத்திகரிக்கப்பட்டு அங்கிருந்து நெல்லை மாநகராட்சி பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. தற்போது குழாய்கள் பதிக்கும் பணிகள் நெல்லை டவுன் காட்சி மண்டபத்தில் இருந்து அருணகிரி தியேட்டர் வரை 2 இரும்பு குழாய்கள் பதிக்கப்பட உள்ளன.

எனவே அந்த வழியாக வரும் வாகனங்கள் கடந்த 9-ந் தேதி முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. அன்று ஒரு பகுதி போக்குவரத்து திருப்பி விடப்பட்டது.

அதாவது பேட்டை, சேரன்மாதேவி, முக்கூடல், கடையம் ஆகிய ஊர்களுக்கு செல்லக்கூடிய பஸ்கள் நெல்லையப்பர் கோவில் சன்னதி, சந்திப்பிள்ளையார் கோவில், காட்சி மண்டபம் வழியாக வந்தன. அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் குடிநீர் திட்டப்பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டன. பஸ்கள் வழக்கமான வழித்தடத்தில் இயக்கப்பட்டன. தென்காசி மார்க்கமாக செல்லக்கூடிய பஸ் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படவில்லை.

இந்த நிலையில் நெல்லை டவுன் காட்சி மண்டபம், கண்டியப்பேரி உள்ளிட்ட பகுதியில் சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து அரியநாயகிபுரம் குடிநீர் திட்டப்பணிக்காக இன்று (வியாழக்கிழமை) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது.

இதுகுறித்து நெல்லை மாநகர துணை போலீஸ் கமிஷனர் (குற்றம்-போக்குவரத்து) பெரோஸ்கான் அப்துல்லாவிடம் கேட்ட போது “அரியநாயகிபுரம் அணைகட்டு குடிநீர் திட்டப்பணிக்காக இன்று (வியாழக்கிழமை) காலை 6 மணி முதல் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது. அதன்படி பேட்டை, சேரன்மாதேவி, முக்கூடல், கடையம் ஆகிய ஊர்களுக்கு செல்லக்கூடிய பஸ்கள் நெல்லையப்பர் கோவில் சன்னதி, சந்திப்பிள்ளையார் கோவில், காட்சி மண்டபம் வழியாக செல்லும். தென்காசி மார்க்கமாக செல்லக்கூடிய பஸ்கள் வண்ணார்பேட்டை, தச்சநல்லூர், ராமையன்பட்டி, கண்டியப்பேரி, பழையபேட்டை வழியாக செல்லும். இந்த பணி 2 மாதங்களுக்குள் முடியும். தென்காசி வாகனங்கள் செல்லுவது தொடர்பாக கலெக்டர் உத்தரவுப்படி வண்ணார்பேட்டை பகுதியில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு உள்ளது” என்றார்.

Next Story