தரப்பாக்கத்தில் குடிநீர் கம்பெனிகளை மூடக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்


தரப்பாக்கத்தில் குடிநீர் கம்பெனிகளை மூடக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 16 May 2019 10:45 PM GMT (Updated: 16 May 2019 8:22 PM GMT)

தரப்பாக்கத்தில் குடிநீர் கம்பெனிகளை மூடக்கோரி தலையில் காலி குடங்களை சுமந்தபடி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பூந்தமல்லி,

குன்றத்தூரை அடுத்த தண்டலம் மற்றும் தரப்பாக்கம் ஊராட்சிகளுக்கு உட்பட்ட மதுரவாயல்-தாம்பரம் பைபாஸ் சர்வீஸ் சாலையில் தனியாருக்கு சொந்தமான 8 குடிநீர் கம்பெனிகள் உள்ளன. இங்கு ஆழ்துளை கிணறுகள் மூலம் தண்ணீரை எடுத்து சுத்திகரிப்பு செய்து, கேன்களில் அடைத்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள கடைகள், வீடுகளுக்கு வினியோகம் செய்யப்படுகிறது.இந்த குடிநீர் கம்பெனிகளால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, சுற்றுவட்டாரத்தில் உள்ள குடியிருப்புகளில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுவதாக கூறி தரப்பாக்கம் பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட திரளான பொதுமக்கள் தரப்பாக்கத்தில் உள்ள குடிநீர் கம்பெனிகளை மூடக்கோரி அந்த கம்பெனிகளை முற்றுகையிட்டனர்.

மேலும் தலையில் காலி குடங்களை சுமந்தபடி சாலையில் நின்று திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் குன்றத்தூர் போலீசார் மற்றும் பல்லாவரம் தாசில்தார் ஹேமாவதி ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

மேலும் பிரச்சினை தீரும்வரை அந்த பகுதியில் உள்ள குடிநீர் கம்பெனிகளை மூடும்படி தாசில்தார் தெரிவித்தார். இதையடுத்து அங்குள்ள குடிநீர் கம்பெனிகள் மூடப்பட்டன. இதையடுத்து சாலை மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இது தொடர்பாக அந்த பகுதி பொதுமக்கள் கூறியதாவது:-

தண்டலம், தரப்பாக்கம் ஊராட்சிகளுக்கு உட்பட்ட பகுதியில் முன்பெல்லாம் 20 அடி முதல் 30 அடியில் ஆழ்துளை கிணறு அமைத்தால் தண்ணீர் கிடைக்கும். ஆனால் தற்போது இந்த சர்வீஸ் சாலையில் 8-க்கும் மேற்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கம்பெனிகள் வந்ததாலும், கோடை காலம் என்பதால் தண்ணீர் விற்பனை அதிகரித்துள்ளதால் கூடுதலாக ஆழ்துளை கிணறுகள் அமைத்து தண்ணீர் எடுக்கப்பட்டு வருவதால் குடியிருப்பு பகுதிகளில் நிலத்தடி நீர் குறைந்துவிட்டது.

இதனால் 100 அடி முதல் 200 அடி வரை ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே உள்ள ஆழ்குழாய் கிணறுகளில் தண்ணீர் இல்லை. எனவே இந்த தண்ணீர் கம்பெனிகளை நிரந்தரமாக மூடவேண்டும். இல்லை என்றால் மீண்டும் போராட்டம் நடைபெறும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story