அருப்புக்கோட்டை அருகே, சூறைக்காற்றில் மின்கம்பம் சாய்ந்தது - 4 வழிச்சாலையில் போக்குவரத்து பாதிப்பு


அருப்புக்கோட்டை அருகே, சூறைக்காற்றில் மின்கம்பம் சாய்ந்தது - 4 வழிச்சாலையில் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 17 May 2019 3:27 AM IST (Updated: 17 May 2019 3:27 AM IST)
t-max-icont-min-icon

அருப்புக்கோட்டை அருகே சூறைக்காற்றில் மின் கம்பம் சாய்ந்தது. 4 வழிச்சாலையில் மின் கம்பி அறுந்து விழுந்ததால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அருப்புக்கோட்டை,

மாவட்டத்தின் பல இடங்களில் கடும் வறட்சி நிலவி வரும் நிலையில் கோடைமழை ஆங்காங்கே பெய்யத்தொடங்கியுள்ளது. மேலும் சூறைக்காற்றும் வீசுகிறது. அருப்புக்கோட்டை மற்றும் சுற்றுவட்டாரப்பகுதியில் நேற்று மாலை இடி-மின்னலுடன் பரவலாக மழை பெய்தது. சில இடங்களில் ஆலங்கட்டி மழையும் பெய்தது. சூறைக்காற்றும் வீசியது.

இதில் அருப்புக்கோட்டை அருகே 4 வழிச்சாலையில் ராமசாமிபுரம் விலக்கு பகுதியில் உள்ள இரும்பு மின்கம்பத்தின் அடிப்பாகம் முறிந்து சாய்ந்தது.

மின்கம்பம் சாய்ந்த நிலையில் கம்பிகள் 4 வழிச்சாலையில் விழுந்தன. உடனடியாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. தகவல் அறிந்து மின் ஊழியர்கள் அங்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். சுமார் 1 மணி நேரத்துக்கு பின்னர் போக்குவரத்து தொடங்கியது.

மின்கம்பம் சாய்ந்ததை தொடர்ந்து பந்தல்குடி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் மின்வினியோகம் பாதிக்கப்பட்டது.

ரெட்டியபட்டி, அகரத்துப்பட்டி, திருமலையாபுரம் பகுதிகளில் வாழைத் தோட்டங்கள் அதிகமாக உள்ளன. கடந்த சில நாட்களாக இந்த பகுதிகளில் கோடை வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் அக்னி வெயிலும் வாட்டி வதைத்து வந்தது. இந்த நிலையில் நேற்றுமுன்தினம் சூறைக்காற்றுடன் லேசான மழை பெய்தது. சூறைக்காற்றால் வாழைத்தோட்டங்கள், பசுமைக்குடில் பலத்த சேதமடைந்தன.

அகரத்துபபட்டி பகுதியில் உள்ள சங்கரலிங்கம், முத்துமாரி, கணேசமுர்த்தி உள்ளிட்ட விவசாயிகளுக்கு சொந்தமான ஏராளமான வாழை மரங்கள் சூறைக்காற்றால் சாய்ந்து விழுந்தன. இன்னும் சில வாரங்களில் அறுவடை செய்ய வேண்டிய நிலையில் வாழை மரங்கள் சாய்ந்தது விவசாயிகள் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என விவசாயிகள் கவலையுடன் தெரிவித்தனர்.

இதேபோல் திருமலைபுரம் கிராமத்தில் மணி முத்து என்பவர் இஸ்ரேல் தொழில் நுட்பத்தில் பசுமைக்குடில் அமைத்து ரோஜா வளர்த்து வந்துள்ளார். சூறைக்காற்றில் அது நாசமானது.

சேத மதிப்பீட்டை கணக்கிட்டு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story