அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - ம.நீ.ம. மதுரை வேட்பாளர், போலீசில் புகார்


அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - ம.நீ.ம. மதுரை வேட்பாளர், போலீசில் புகார்
x
தினத்தந்தி 16 May 2019 10:47 PM GMT (Updated: 16 May 2019 10:47 PM GMT)

கமல்ஹாசன் குறித்து பேசிய அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் கமிஷனரிடம் மக்கள் நீதி மய்யம் மதுரை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் புகார் அளித்துள்ளார்.

மதுரை,

மதுரை ஆரப்பாளையம் கிராஸ் ரோடு பகுதியை சேர்ந்தவர் அழகர். வக்கீலான இவர் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மதுரை மத்திய மாவட்ட பொறுப்பாளராக உள்ளார். மேலும் இவர் மதுரை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக போட்டியிட்டுள்ளார். நேற்று அழகர், மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதத்தை சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன், கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலையொட்டி பிரசாரம் செய்தார். அப்போது அவர் யாருடைய மனதையும் புண்படாத வகையில் முழுமையாகவும், விளக்கமாகவும் சாதாரணமாகவும் கருத்தை கூறினார். அதற்கு யார் வேண்டுமானாலும் மறுப்பு தெரிவிக்கலாம். ஆனால் கடந்த 13-ந் தேதி தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தொகுதியில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, நிருபர்களிடம் ஒரு கருத்தை தெரிவித்துள்ளார்.

அதில், கமல்ஹாசனின் பேச்சை முழுமையாகவும் தெளிவாக கேட்காமல் கண்ணிய குறைவாகவும், வன்முறையை தூண்டும் வகையிலும், சட்டம்-ஒழுங்கை கெடுக்கும் விதத்திலும் பகிரங்கமாக மிரட்டல் விடுத்தார். மேலும் அவர் அமைச்சரவை உறுதிமொழிக்கு முரணான வகையில் கமல்ஹாசனின் நாக்கை அறுக்க வேண்டும் என்று தனது கருத்தை பதிவு செய்திருந்தார்.

அவர் அமைச்சராக இருந்து கொண்டு அந்த பதவிக்கு கண்ணிய குறைவு ஏற்படும் வகையிலும், வன்முறையை தூண்டும் வகையிலும் கருத்தை கூறியிருப்பது இந்திய தண்டனை சட்டத்தின் படி தண்டிக்க கூடிய குற்றச்செயலாகும். எனவே அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மீது வழக்குப்பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

மனுவை பெற்று கொண்ட போலீஸ் கமிஷனர் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.


Next Story