மாவட்ட செய்திகள்

“23-ந்தேதி துரோகிகள் வீழ்ந்து விடுவார்கள்” - திருப்பரங்குன்றம் பிரசாரத்தில் டி.டி.வி.தினகரன் பேச்சு + "||" + "Traitors will fall on the 23rd" - TTV. Dinakaran speech in Tiruparankundram campaign

“23-ந்தேதி துரோகிகள் வீழ்ந்து விடுவார்கள்” - திருப்பரங்குன்றம் பிரசாரத்தில் டி.டி.வி.தினகரன் பேச்சு

“23-ந்தேதி துரோகிகள் வீழ்ந்து விடுவார்கள்” - திருப்பரங்குன்றம் பிரசாரத்தில் டி.டி.வி.தினகரன் பேச்சு
“23-ந்தேதி துரோகிகள் வீழ்ந்து விடுவார்கள்” என்று திருப்பரங்குன்றம் தொகுதி தேர்தல் பிரசாரத்தில் டி.டி.வி.தினகரன் கூறினார்.
நாகமலைபுதுக்கோட்டை,

மதுரை திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.ம.மு.க. வேட்பாளர் மகேந்திரனுக்கு ஆதரவாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் நாகமலைபுதுக்கோட்டை பகுதியில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-


ஆர்.கே.நகரில் வெற்றி பெற்ற பிறகு நான் அங்கு செல்லவில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் பொய் சொல்கிறார். நாடாளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு கூட ஆர்.கே.நகரில் நடந்த கட்சி பிரமுகர்களின் திருமண விழாக்களில் கலந்து கொண்டேன். ஆர்.கே.நகர் மக்கள் என்னை வெற்றிபெறச் செய்து தமிழகம் முழுவதும் துரோகிகளை வீழ்த்த அனுப்பியுள்ளனர்.

ஓ.பன்னீர்செல்வம் கட்சிக்கு துரோகம் செய்து மதுரை மண்டலத்திற்கு களங்கத்தை ஏற்படுத்தியுள்ளார். அதனால் அவரை பதவியில் இருந்து இறக்கினோம். சசிகலா சிறைக்கு செல்லும் முன்பு எடப்பாடி பழனிசாமியை தனது சகோதரராக கருதி முதல்-அமைச்சர் பதவியில் அமர்த்தினார். ஆனால் அவர் அதனை மறந்து சசிகலாவிற்கே துரோகம் செய்தார். அவர் எப்படி தமிழக மக்களுக்கு நன்மை செய்வார்.

22 தொகுதி இடைத்தேர்தலிலும் அ.ம.மு.க., வெற்றி பெறும் என்பதை தெரிந்து தான் 3 எம்.எல்.ஏ.க்களை தகுதியிழப்பு செய்ய முயற்சிக்கின்றனர். வருகிற 23-ந்தேதி துரோகிகள் வீழ்ந்து விடுவார்கள். சசிகலா முதல்- அமைச்சராக வேண்டும் என்று முதலில் கூறிய ஆர்.பி.உதயகுமார் தற்போது சசிகலா சிறையில் உள்ளதால் அவரை பற்றி பேச வேண்டாம் என்று கூறுகிறார். மந்திரவாதி கே.டி.ராஜேந்திரபாலாஜி அடுத்த தேர்தலில் டெபாசிட் இழப்பார். இவர்கள் எல்லாம் கசாப்புக்கடைக்காரர்கள் போன்று செயல்படுகின்றனர். ஆர்.கே.நகரில் தி.மு.க. டெபாசிட் இழந்தது. திருப்பரங்குன்றத்தில் துரோகிகள், விரோதிகளான அ.தி.மு.க., தி.மு.க. இரு கட்சிகளையும் டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும்.

ஓ.பன்னீர்செல்வம் ஒன்றும் பொருளாதார மேதையோ, விஞ்ஞானியோ இல்லை. செல்லூர் ராஜூவை வேண்டுமானால் விஞ்ஞானி என்று கூறலாம். பல நாடுகளில் இருந்தும் அவரிடம் தெர்மா கோல் குறித்து கேட்டு வருகின்றனர். துரோகத்தை ராஜதந்திரம் என்கிறார்கள். இதை எங்காவது கேள்விப்பட்டது உண்டா? பல அமைச்சர்கள் ஊருக்குள் செல்ல முடியாத நிலையில் உள்ளனர். அவர்களோடு நாம் எப்படி சேரமுடியும். துரோகிகளை கூண்டோடு தோற்கடிக்க வேண்டும். அ.ம.மு.க. வெற்றி பெற்றதும் அச்சம்பத்து, விராட்டிபத்தில் இருவழிச்சாலையாக உள்ள மதுரை-தேனி சாலைக்கு பதில் பைபாஸ் ரோட்டில் இருந்து மாற்றுச்சாலை அமைக்கவும், காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தை முழுமை பெறச் செய்யவும், அடிப்படை வசதிகளை நிறைவேற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும். உண்மையான ஜெயலலிதா ஆட்சி அமைய, மக்களாட்சி அமைய அ.ம.மு.க.வை மக்கள் அமோக வெற்றிபெறச் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

கீழக்குயில்குடியில் டி.டி.வி.தினகரன் பேசும்போது, “ஆங்கிலேயர் ஆட்சியில் முதன் முதலில் கீழக்குயில்குடியில் 324 பேர் மீது கைரேகை சட்டத்தின் கீழ் வழக்கு போடப்பட்டது. பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் மற்றும் வீரத்தியாகிகளின் போராட்டத்தால் அது முறியடிக்கப்பட்டது. அ.ம.மு.க. ஆட்சிக்கு வந்தால் கைரேகை சட்டத்தால் பாதிக்கப்பட்ட 60-க்கும் மேற்பட்ட சமூகங்களை சீர்மரபினர் பழங்குடியினர் என்று அறிவித்து அவர்களுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகளை கிடைக்க செய்வோம். வீரம் விளைந்த மண்ணில் இருந்து வந்த ஓ.பன்னீர்செல்வம், மோடிக்கு பாத பூஜை செய்கிறார். அப்படிப்பட்ட கோழைகளை வீழ்த்த அ.ம.மு.க.வை வெற்றிபெற செய்ய வேண்டும்” என்றார். தொடர்ந்து வடிவேல்கரை, வடபழஞ்சி ஆகிய பகுதிகளில் வேட்பாளர் மகேந்திரனுக்கு ஆதரவாக வாக்குகள் சேகரித்தார்.


அதிகம் வாசிக்கப்பட்டவை