தி.மு.க. எதிர்க்கட்சி அல்ல; மக்களுக்கு எதிரான கட்சி - த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் பேச்சு


தி.மு.க. எதிர்க்கட்சி அல்ல; மக்களுக்கு எதிரான கட்சி - த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் பேச்சு
x
தினத்தந்தி 16 May 2019 11:03 PM GMT (Updated: 16 May 2019 11:03 PM GMT)

தி.மு.க. எதிர்க்கட்சி அல்ல என்றும், மக்களுக்கு எதிரான கட்சி என்றும் ஜி.கே.வாசன் கூறினார்.

திருப்பரங்குன்றம்,

திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் முனியாண்டியை ஆதரித்து த.மா.கா. சார்பில் திருப்பரங்குன்றம் பஸ் நிலையத்தில் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மதுரை மாநகர் மாவட்ட தலைவர் சேதுராமன் தலைமை தாங்கினார். மதுரை தெற்கு மாவட்ட மேலிட பார்வையாளர் பலசமயம், வர்த்தக அணி தலைவர் நாகராஜன், இளைஞரணி நாகமலைச்சாமி, நாகமலை ஸ்ரீதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மதுரை தெற்கு மாவட்ட தலைவர் காந்தி வரவேற்றார். கூட்டத்தில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

திருப்பரங்குன்றம் தொகுதி வாக்காளர்கள் கவனமாக சிந்தித்து சரியான முடிவு எடுக்க வேண்டும். தமிழகத்தில் 2 கூட்டணிகள் உள்ளன. அதில் அ.தி.மு.க. கூட்டணி வெற்றிக்கூட்டணி. தி.மு.க. கூட்டணி தோல்வி கூட்டணி. ஆடம்பரம், ஆரவாரம் இல்லாமல் அமைதியான முறையில் மக்கள் நம்பிக்கையின் கூட்டணியாக அ.தி.மு.க. உள்ளது. இதற்கு எதிர்மாறாக தி.மு.க. கூட்டணி உள்ளது. நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் 38 தொகுதியிலும், 18 சட்டமன்ற தொகுதியிலும் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறுவது உறுதி. இதேபோல் தற்போது நடைபெற உள்ள 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலிலும் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும். இதில் மாற்றுக்கருத்து இல்லை.

இந்து மதம் குறித்து கமல்ஹாசன் பேசியது ஏற்புடையது அல்ல. குற்றச் செயலுக்கு யாராக இருந்தாலும் துணை போகக்கூடாது. குற்றச் செயலுக்கு துணை போகிறவர்களை மக்கள் புறக்கணிப்பார்கள். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், பிரதமராக ராகுல்காந்தி வருவார் என்று கூறினார். ஆனால் தற்போது தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகரராவை சந்திக்கிறார். இது அரசியலில் சந்தர்ப்ப உச்சகட்டமாக உள்ளது. மக்களுக்கு தைப்பொங்கல் திருநாளில் அ.தி.மு.க. அரசு ரூ.1,000 வழங்கியது. அதை எதிர்த்து தி.மு.க.வினர் கோர்ட்டுக்கு சென்றனர். விவசாயிகள், ஏழை-எளியவர்களுக்கு ரூ.2,000 வழங்குவதாக அ.தி.மு.க. அரசு அறிவித்தது. அதற்கும் தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவித்தனர். உள்ளாட்சி தேர்தல் தொடர்பாகவும் வழக்கு தொடுக்கிறார்கள். இவ்வாறு மக்களுக்கு எதிராக தி.மு.க. செயல்படுகிறது. அக்கட்சி எதிர்க்கட்சி அல்ல. மக்களுக்கு எதிரான கட்சி. இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் அமைச்சர் செல்லூர் ராஜூ, அ.தி.மு.க. மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., எம்.ஜி.ஆர். இளைஞரணி மாவட்ட செயலாளர் வக்கீல் ரமேஷ், பொதுக்குழு உறுப்பினர் முத்துக்குமார், ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன், சிவானந்தன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story