மணல் கடத்தி சென்ற லாரி மோதி 2 கார்கள் சேதம் : பெண்கள் உள்பட 5 பேர் கைது
செய்யாறில் மணல் கடத்தி சென்ற மினி லாரி மோதி 2 கார்கள் சேதமடைந்தன. 2 பெண்கள் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
செய்யாறு,
செய்யாறு டவுன் வெங்கடேஸ்வரா நகர் பகுதியில் செய்யாறு போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மினி லாரி ஓட்டி வந்த டிரைவர், போலீசாரை கண்டதும் வேகமாக ஓட்டிச்சென்றார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் பின்தொடர்ந்து சென்றது போது, டிரைவர் மினிலாரியை நிறுத்தாமல் கீழே குதித்து தப்பி ஓடிவிட்டார்.
டிரைவர் இல்லாமல் மினி லாரி தாறுமாறாக ஓடி வெங்கடேஸ்வரா நகரில் வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த 2 கார்கள் மீது மோதி, வீட்டின் சுற்றுசுவரை இடித்து நின்றது. பின்னர் போலீசார் மினிலாரியை சோதனை செய்து பார்த்த போது மணல் கடத்தி சென்றது தெரியவந்தது. மேலும் மினி லாரியில் இருந்த 2 பெண்கள் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்து, மணலுடன் மினிலாரியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், கொடநகர் பகுதியை சேர்ந்த சக்திவேல், அவரது மனைவி சத்யா, பெருமாள், அவரது மனைவி ராதா ஆகியோரை பாலாஜி என்பவர் மணல் அள்ள கூலி வேலைக்கு அழைத்து சென்றதும், தப்பி ஓடிய டிரைவர் கன்னியம் நகர் பகுதியை சேர்ந்த இளஞ்செழியன் என்பதும் தெரியவந்தது.
இந்த விபத்தில் 2 கார்கள் சேதமடைந்தது. இதுகுறித்து காரின் உரிமையாளர்கள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய டிரைவர் இளஞ்செழியனை வலைவீசி தேடி வருகின்றனர்.