கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ‘தாய்’ திட்டத்தின் மூலம் ரூ.80 லட்சத்தில் மேம்படுத்தப்படும் அவசர சிகிச்சை பிரிவு


கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ‘தாய்’ திட்டத்தின் மூலம் ரூ.80 லட்சத்தில் மேம்படுத்தப்படும் அவசர சிகிச்சை பிரிவு
x
தினத்தந்தி 18 May 2019 3:45 AM IST (Updated: 17 May 2019 10:31 PM IST)
t-max-icont-min-icon

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ‘தாய்’ திட்டத்தின் மூலம் ரூ.80 லட்சத்தில் அவசர சிகிச்சைப்பிரிவு மேம்படுத்தப்பட்டு வருகிறது.

சென்னை,

சாலை விபத்தில் காயம் அடைந்தவர்கள், மாரடைப்பால் பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. தற்போது ‘தாய்’ திட்டம் (தமிழ்நாடு விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு) முக்கிய மருத்துவமனைகளில் செயல்பட்டு வருகிறது.

நோயாளிகளின் உடல் நிலையை பொருத்து அவர்களை வகைப்படுத்தி, அதற்குரிய சிகிச்சைகளை துரிதமாகவும், துல்லியமாகவும் அளிக்கும் நடைமுறை தான் ‘தாய்’ திட்டம். ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் உள்ள சிகிச்சை முறைகளை பின்பற்றி அத்திட்டம் தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்காக அந்நாட்டுடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

முதல்கட்டமாக கடந்த ஆண்டு ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை உள்பட 75 மருத்துவமனைகளிலும், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் கடந்த ஜனவரி மாதத்தில் இருந்தும் சோதனை முறையில் விபத்து மற்றும் அவசரகால சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டது. இதில் சிவப்பு, மஞ்சள், பச்சை என 3 பிரிவுகள் உருவாக்கப்பட்டு நோயாளிகளுக்கு தேவையான உயிர் காக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த புதிய நடைமுறையால் முன்பை காட்டிலும் இறப்பு விகிதம் கணிசமாக குறைந்திருப்பதாக ராஜீவ்காந்தி மற்றும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. இதைத்தொடர்ந்து, இந்த சிகிச்சை பிரிவுகளை மேலும் சில மருத்துவமனைகளுக்கும் விரிவுபடுத்த திட்டமிட்டது.

அதன் அடுத்தகட்டமாக ரூ.80 லட்சம் செலவில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையிலும் தாய் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டு, அதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன.

இதுகுறித்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை டீன் டாக்டர் வசந்தாமணி கூறியதாவது:-

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் செயல்பாட்டில் இருந்த அவசர சிகிச்சைப்பிரிவு, ‘தாய்’ திட்ட சிகிச்சைக்காக மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. புதிதாக, நோயாளிகள் பதிவு அறை, அவரச கால அறுவை சிகிச்சை அரங்கம், தீவிர கண்காணிப்பு பிரிவு, கட்டுபோடும் அறை, செயல்முறை அறை, நோயாளிகளுடன் வந்தவர்களுக்கான காத்திருக்கும் அறை உள்பட நோயாளிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய வகையில் 3 பிரிவுகளாக (சிவப்பு, மஞ்சள், பச்சை) சிகிச்சை பகுதிகள் பிரிக்கப்பட்டு, அதற்குரிய வசதிகளுடன் கூடிய விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு மேம்படுத்தப்பட்டு வருகிறது.

புதிதாக மேம்படுத்தப்பட்டு வரும் அவசர சிகிச்சை பிரிவில் 150 நோயாளிகளை அனுமதிக்கலாம். இதில் தீ விபத்து, சாலை விபத்தில் காயம் அடைந்தவர்கள், நச்சு பாதிப்பு போன்ற அவசர சிகிச்சை நோயாளிகள் 50 பேருக்கு ஒரே நேரத்தில் சிகிச்சை அளிக்கலாம். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு நோயாளிகள் 100 பேரை கண்காணிப்பு அறையில் வைத்து அடுத்தகட்ட சிகிச்சை அளிக்கலாம். இதன் மூலம் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படும் நோயாளிகள் இறப்பு விகிதம் கணிசமாக குறையும். அடுத்த மாதம் (ஜூன்) முதல் வாரத்திற்குள் அனைத்து வேலைகளும் முடிக்கப்பட்டு விரைவில் அவசர சிகிச்சை பிரிவு மக்கள் பயன்பாட்டுக்கு வரும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story