சேலத்தில் பரபரப்பு சிறப்பு காவல்படை போலீஸ்காரர் தற்கொலை முயற்சி
சேலத்தில் சிறப்பு காவல்படை போலீஸ்காரர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம்,
சேலம் சூரமங்கலம் அருகே அரியாகவுண்டம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 33). இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவர், கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல்படையில் (7-வது பட்டாலியன்) போலீஸ்காரராக உள்ளார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மருத்துவ விடுப்பில் சேலத்திற்கு வந்த அவர், அதன்பிறகு விடுப்பு முடிந்து பணிக்கு திரும்பவில்லை.
இந்தநிலையில், நேற்று முன்தினம் அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். வீட்டில் மயங்கி கிடந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தலைவலி இருப்பதாக கூறி சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு ராமகிருஷ்ணன் வந்து நிறைய மாத்திரைகளை வாங்கி சென்றுள்ளதாகவும், அதன்பிறகு அவர் வீட்டில் இருந்தபோது மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இது குறித்து சூரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கபடி வீரரான ராமகிருஷ்ணன் தமிழ்நாடு காவல்துறை சார்பில் நடக்கும் மாநில அளவிலான கபடி போட்டியில் பங்கேற்று விளையாடுவார். ஆனால் கடந்த 2017-ம் ஆண்டு ஏற்பட்ட ஒரு விபத்தில் அவர் படுகாயம் அடைந்ததால் அதன்பிறகு அவரது உடல்நலம் கருதி கபடி போட்டியில் பங்கேற்க போலீஸ் உயர் அதிகாரிகள் அனுமதிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.
இதன் காரணமாக போலீஸ்காரர் ராமகிருஷ்ணன் தொடர்ந்து கபடி போட்டியில் பங்கேற்க முடியாமல் இருந்து வந்தார். இதனால் கபடி விளையாட முடியாத ஏக்கத்தில் இருந்து வந்த அவர் இந்த முடிவை எடுத்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்பது குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே கடந்த 2 மாதத்திற்கு முன்பு ராமகிருஷ்ணன் விஷம் குடித்தும், கையை பிளேடால் அறுத்தும் தற்கொலைக்கு முயன்றதும், அதன்பிறகு அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story