கோவையில், சாலையோரம் கிடந்த பச்சிளம் குழந்தை மீட்பு
கோவையில் சாலையோரம் கிடந்த பச்சிளம் ஆண் குழந்தை மீட்கப்பட்டது.
கோவை,
கோவை அரசு கலைக்கல்லூரி அருகே நேற்று முன்தினம் இரவு 8.30 மணியளவில் தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் 2 பேர் நடந்து சென்றனர். அப்போது சாலையோரம் பச்சிளம் குழந்தையின் அழுகுரல் சத்தம் கேட்டது.
இதையடுத்து அந்த மாணவர்கள் சத்தம் கேட்ட இடத்தை நோக்கி சென்று பார்த்தனர். அப்போது அங்குள்ள மின்மாற்றியின் கீழ் ஒரு துணிப்பையில் பச்சிளம் ஆண் குழந்தை துணியால் சுற்றப்பட்ட நிலையில் கிடந்தது.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று குழந்தையை மீட்டனர். அந்த குழந்தை நீண்ட நேரமாக அழுதுகொண்டு இருந்ததால் மிகவும் சோர்வாக இருந்தது. இதனால் சிகிச்சைக்காக அந்த குழந்தையை கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு குழந்தைகள் நல சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து அரசு ஆஸ்பத்திரி குழந்தைகள் நல டாக்டர்கள் கூறும்போது, ’அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்ட குழந்தையானது பிறந்து 7 நாட்களே ஆன ஆண் குழந்தையாகும். அந்த குழந்தை தற்போது உடல் நிலை நன்கு தேறி வருகிறது. தொடர்ந்து கவனித்து வருகிறோம்’ என்றனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, பிறந்து 7 நாட்களே ஆன நிலையில் குழந்தையை போட்டு சென்ற கல் நெஞ்சம் படைத்த தாய் யார்?, கள்ளத்தொடர்பில் பிறந்ததால் போட்டு சென்றாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோட்டில் கடந்த 4-ந் தேதி பச்சிளம் பெண் குழந்தை துணியால் பொதிந்தவாறு கிடந்தது. அந்த குழந்தை தற்போது கிணத்துக்கடவு பகுதியில் உள்ள ஒரு காப்பகத்தில் உள்ளது.
கோவையில் இதுபோன்று பச்சிளம் குழந்தைகளை சாலையோரம் வீசி செல்லும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருவது பொதுமக்கள் இடையே அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தி உள்ளது. எனவே தொட்டில் குழந்தை திட்டம் குறித்து கூடுதல் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
Related Tags :
Next Story