தேர்தல் முடிவு வெளியாவதற்கு முன்பே ஓ.பன்னீர்செல்வம் மகனை எம்.பி. என்று குறிப்பிட்டு கல்வெட்டு வைத்த போலீஸ்காரர்
தேர்தல் முடிவு வெளியாவதற்கு முன்பே ஓ.பன்னீர்செல்வத்தின் மகனை எம்.பி. என்று குறிப்பிட்டு கல்வெட்டு வைத்தவர் ஒரு போலீஸ்காரர் என தெரியவந்துள்ளது.
சின்னமனூர்,
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே குச்சனூரில் காசி அன்னபூரணி கோவில் உள்ளது. தனியாருக்கு சொந்தமான இந்த கோவிலில், கடந்த சில வருடங்களாக ராஜகோபுரம் கட்டப்பட்டு வந்த நிலையில் நேற்று முன்தினம் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனையடுத்து கோவிலில் 2 கல்வெட்டுகள் திறக்கப்பட்டன.
அதில் ஒரு கல்வெட்டில், பேருதவி புரிந்தவர் என்று மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. மற்றொரு கல்வெட்டில் பேருதவி புரிந்தவர்கள் என்று துணை முதல்அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவருடைய மகன்களான ஓ.ப.ரவீந்திரநாத்குமார், ஜெயபிரதீப் ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றிருந்தன. இதில், ஜெயபிரதீப் என்பதற்கு பதில் ஜெயபிரதீப்குமார் என்று பெயர் குறிப்பிடப்பட்டு இருந்தது.
மேலும் இந்த கல்வெட்டில் ரவீந்திரநாத்குமார் பெயருக்கு முன்பு ‘தேனி நாடாளுமன்ற உறுப்பினர்‘ என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. அவர் தேனி நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்டுள்ளார். வாக்கு எண்ணிக்கையே நடக்காத நிலையில் அவரை எம்.பி.யாக சித்தரித்து கல்வெட்டு வைக்கப்பட்டிருந்த தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.
தேர்தல் முடிவு வெளியாவதற்கு முன்பே, ஓ.பன்னீர்செல்வத்தின் மகனை நாடாளுமன்ற உறுப்பினர் என்று குறிப்பிட்டு கல்வெட்டு வைக்கப்பட்ட சம்பவம் அரசியல் கட்சியினர் மட்டுமின்றி பொதுமக்கள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே வேறு பெயர்கள் பொறிக்கப்பட்டு தற்போது அந்த கல்வெட்டு மறைக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு வைத்தவர்கள் யார்? எதற்காக வைக்கப்பட்டது? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், கட்டாய ஓய்வு அளிக்கப்பட்ட போலீஸ்காரர் வேல்முருகன் (வயது 48) என்பவர் அந்த கல்வெட்டை வைத்து சர்ச்சையை ஏற்படுத்தி இருப்பது தெரியவந்தது. குச்சனூரை சேர்ந்த வேல்முருகனின் உறவினர்களுக்கு சொந்தமானது இந்த கோவில் ஆகும்.
இதுகுறித்து வேல்முருகன் கூறும்போது, எங்களை பொறுத்தவரை மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா தான் எங்களுக்கு எப்போதும் முதல்வர். தற்போது துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் என்பதால் அவரின் பெயரை குறிப்பிட்டு இருந்தேன். தேனி பாராளுமன்ற வேட்பாளர் என பொறிக்க சொன்ன இடத்தில், பாராளுமன்ற உறுப்பினர் என தவறுதலாக பொறிக்கப்பட்டு விட்டது. இதனை யாரும் கண்டு கொள்ளவில்லை. இது, இவ்வளவு பெரிய பிரச்சினை ஆகும் என்று நினைக்கவில்லை. எனவே கோவில் நிர்வாகம் சார்பில் அந்த கல்வெட்டை மறைத்து வேறு கல்வெட்டு வைக்கப்பட்டுள்ளது என்றார்.
கல்வெட்டு வைத்த போலீஸ்காரர் வேல்முருகன் பல்வேறு சாதனைகளுக்கும், சர்ச்சைகளுக்கும் சொந்தகாரர் ஆவார். ஆறு, கடலில் நீண்ட தூரம் நீந்தி சென்று சாதனை படைத்தவர். கையில் காரையும், வயிற்றில் மோட்டார் சைக்கிளையும் ஏற்றி சாதித்தவர். இவரது சாகசத்துக்காக மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதாவிடம் விருது பெற்றிருக்கிறார்.
ஜெயலலிதா மீது பற்றுடைய வேல்முருகன், அவர் மறைந்தவுடன் சீருடையுடன் மொட்டை அடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும் காவிரி நதிநீர் விவகாரத்தில் தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு உண்ணாவிரதம் இருந்தார். ஜெயலலிதா சாவில் மர்மம் இருப்பதாக கூறி லோயர்கேம்ப் பென்னிகுவிக் மண்டபத்தில் உண்ணாவிரதம் இருந்தவர். சசிகலா முதல்-அமைச்சராக பதவி ஏற்க கூடாது என்று தீக்குளிக்க முயன்று வேல்முருகன் பரபரப்பை ஏற்படுத்தினார்.
கடைசியாக அவர் தேனி மாவட்டம் ஓடைப்பட்டி போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்தார். தொடர்ந்து அவர், காவல் துறையின் கட்டுப்பாட்டை மீறியதாக கூறி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தேனி மாவட்ட போலீஸ்துறை சார்பில் கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டது. தற்போது அவர் சொந்த கிராமத்தில் விவசாயம் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story