நாளை மறு ஓட்டுப்பதிவு நடைபெறும் 8 வாக்குச்சாவடிகளில் 6,012 வாக்காளர்கள் பாதுகாப்பு பணியில் 600 போலீசார் ஈடுபடுகிறார்கள்


நாளை மறு ஓட்டுப்பதிவு நடைபெறும் 8 வாக்குச்சாவடிகளில் 6,012 வாக்காளர்கள் பாதுகாப்பு பணியில் 600 போலீசார் ஈடுபடுகிறார்கள்
x
தினத்தந்தி 18 May 2019 3:45 AM IST (Updated: 18 May 2019 12:18 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மறு ஓட்டுப்பதிவு நடைபெறும் 8 வாக்குச்சாவடிகளில் 6,012 வாக்காளர்கள் உள்ளனர். இந்த வாக்குச்சாவடிகளில் 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

தர்மபுரி,

தர்மபுரி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில் நத்தமேடு உள்ளிட்ட சில பகுதிகளில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவின்போது முறைகேடுகளும், அத்துமீறல்களும் நடைபெற்றதாக தி.மு.க. சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து தர்மபுரி மாவட்டத்தில் 8 வாக்குச்சாவடிகளில் மறுஓட்டுப்பதிவு நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதன்படி தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட டி.அய்யம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள எண் 181, 182 ஆகிய 2 வாக்குச்சாவடிகள், நத்தமேடு அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள எண் 192, 193, 194, 195 ஆகிய 4 வாக்குச்சாவடிகள், ஜாலிப்புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள எண் 196, 197 ஆகிய வாக்குச்சாவடிகள் என மொத்தம் 8 வாக்குச்சாவடிகளில் மறுஓட்டுப்பதிவு நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது.

இந்த 8 வாக்குச்சாவடிகளில் 3,060 ஆண் வாக்காளர்களும் 2,952 பெண் வாக்காளர்களும் என மொத்தம் 6,012 வாக்காளர்கள் உள்ளனர். தமிழகத்தில் மறுஓட்டுப்பதிவு நடைபெறும் வாக்குச்சாவடிகளில் தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் தான் அதிக வாக்குச்சாவடிகள் உள்ளன. மறுஓட்டுப்பதிவு நடைபெறும் 8 வாக்குச்சாவடிகளில் வெப்கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது.

மறுஓட்டுப்பதிவை அமைதியான முறையில் நடத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டு உள்ளன. மறுஓட்டுப்பதிவு நடைபெறும் 8 வாக்குச்சாவடிகளில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜன் கூறியதாவது:-

தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் மறு ஓட்டுப்பதிவு நடைபெறும் 8 வாக்குச்சாவடிகளில் 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். ஒரு வாக்குச்சாவடிக்கு தலா 2 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்களும், 2 வாக்குச்சாவடிகளுக்கு தலா 1 போலீஸ் இன்ஸ்பெக்டரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். இதேபோல் 8 வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு பணியை 9 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மேற்கொள்கிறார்கள்.

மத்திய தொழில்நுட்ப பாதுகாப்பு படையை சேர்ந்த 60 வீரர்களும், தமிழ்நாடு சிறப்பு காவல்படையை சேர்ந்த 140 வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். இதேபோல் மறு ஓட்டுப்பதிவு நடைபெற உள்ள நத்தமேடு, டி.அய்யம்பட்டி, ஜாலிப்புதூர் ஆகிய 3 கிராமங்களில் வெவ்வேறு இடங்களில் தலா 3 சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. நடமாடும் போலீஸ் வாகனத்திலும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். ஓட்டுப்பதிவின்போது வாக்காளர் அடையாள அட்டை உள்ளவர்கள் மட்டுமே வாக்குச்சாவடிகளுக்குள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story