ஈரோட்டில் பலத்த சூறாவளி காற்றுடன் மழை: மரம், விளம்பர தட்டி சாய்ந்து விழுந்து 2 வீடுகள் சேதம்


ஈரோட்டில் பலத்த சூறாவளி காற்றுடன் மழை: மரம், விளம்பர தட்டி சாய்ந்து விழுந்து 2 வீடுகள் சேதம்
x
தினத்தந்தி 18 May 2019 4:00 AM IST (Updated: 18 May 2019 1:57 AM IST)
t-max-icont-min-icon

ஈரோட்டில் பலத்த சூறாவளி காற்றுடன் பெய்த மழையால் மரம், விளம்பர தட்டி சாய்ந்து விழுந்து 2 வீடுகள் சேதமடைந்தன.

ஈரோடு,

ஈரோட்டில் கடந்த சில நாட்களாக பகலில் வெயில் அடிப்பதும், மாலை வேளையில் மழை பெய்வதுமாக காணப்படுகிறது. நேற்று காலை வழக்கம்போல் வெயில் சுட்டெரித்தது. மாலை 4 மணிஅளவில் திடீரென பலத்த சூறாவளி காற்று வீசியது. அப்போது காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் ஈரோடு மாநகரமே புழுதி மண்டலமாக மாறியது. தொடர்ந்து சிறிது நேரத்தில் மழை பொழிய தொடங்கியது.

சுமார் 15 நிமிடங்கள் பலத்த மழை பெய்தது. சூறாவளி காற்றுடன் பெய்த மழை பல்வேறு இடங்களில் சேதத்தை ஏற்படுத்தியது.

ஈரோடு கருங்கல்பாளையம் கே.என்.கே.ரோட்டில் உள்ள வேப்பமரம் வேருடன் சாய்ந்து சாலையோரமாக உள்ள வீட்டின் மீது விழுந்தது. இதில் வீட்டின் ஓடுகள் சேதமடைந்தது. அப்போது வீட்டின் உள்ளே சுப்பிரமணியன் (வயது 46), அவருடைய மனைவி கவுரி, அக்காள் ஜோதிமணி, தங்கை சண்முகவள்ளி ஆகியோர் இருந்தனர். மரம் சாய்ந்து விழுந்ததும் அதிர்ச்சி அடைந்த அவர்கள் அலறி அடித்துக்கொண்டு வெளியே ஓடி வந்தனர். மேலும், ஜோதிமணியின் பேரனான 2 வயது பெண் குழந்தையும் வீட்டில் தூங்கி கொண்டு இருந்தது. அந்த குழந்தையையும் அவர்கள் வெளியே தூக்கிக்கொண்டு வந்தனர்.

மரம் சாய்ந்து விழுந்ததில் வீடு மட்டும் சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. மேலும், சாலையின் குறுக்கே சென்ற மின்கம்பி அறுந்து தொங்கியது. இதுபற்றிய தகவல் கிடைத்ததும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அங்கு திரண்டனர்.

இதுகுறித்து ஈரோடு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் நிலைய அதிகாரி மயில்ராஜூ தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். நடுரோட்டில் தொங்கி கொண்டு இருந்த மின்கம்பியை இழுத்து மின்கம்பத்தில் கட்டி வைத்தனர். தொடர்ந்து மரங்களின் கிளைகளை வெட்டி வீட்டின் மீது விழுந்து கிடந்த மரத்தை அப்புறப்படுத்தினார்கள்.

இந்த மீட்பு பணிகள் நடக்கும் வரை அந்த வழியாக பஸ்கள், லாரிகள் போன்ற வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.

இதேபோல் கருங்கல்பாளையம் காவிரிக்கரை பகுதியில் ஆற்றங்கரையோரமாக சுமார் 40 அடி உயரத்தில் வைக்கப்பட்டு இருந்த விளம்பர தட்டி சூறாவளி காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் சரிந்து விழுந்தது. இந்த விளம்பர தட்டி அங்குள்ள விநாயகர் கோவில் மற்றும் வீட்டின் மீது விழுந்தது. அப்போது அந்த வீட்டில் வசித்த வரும் சிவராஜின் மனைவி ஆராயி (60) என்பவர் வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்பினார். அவர் வீட்டுக்குள் செல்வதற்காக கதவை திறக்க முயன்றபோது விளம்பர தட்டி சடசடவென சரிந்து விழுந்துள்ளது. இதைப்பார்த்ததும் அவர் அதிர்ச்சியில் உறைந்தார்.

உடனடியாக அருகில் உள்ள சுவற்றின் ஓரமாக ஒதுங்கி நின்று உயிர் தப்பினார். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் வருவாய்த்துறையினரும், கருங்கல்பாளையம் போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

ஈரோடு காவிரிரோட்டில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் வைக்கப்பட்டு உள்ள விளம்பர தட்டியில் பேனர் கிழிந்து காற்றில் பறந்தது. அது அந்த பகுதியில் உள்ள மின்கம்பியின் மீது விழுந்தது. இதுபற்றிய தகவல் கிடைத்ததும் மின்சார வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அவர்கள் பெரும் சிரமப்பட்டு மின்கம்பியில் சிக்கியிருந்த பேனரை அப்புறப்படுத்தினார்கள்.

ஈரோடு பவானிரோட்டில் இருந்து சத்திரோட்டுக்கு செல்லும் சாலையில் வ.உ.சி. பூங்காவுக்கு பின்புறம் மரம் வேருடன் சரிந்து விழுந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அந்த வழியாக செல்ல வேண்டிய பஸ்கள் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டன. அங்கு சென்ற போக்குவரத்து போலீசார், பொதுமக்கள் உதவியுடன் மரங்களை அறுத்து அப்புறப்படுத்தினார்கள். அதன்பின்னர் போக்குவரத்து சீரானது.

வளையக்காரவீதி அருகில் உள்ள செல்லபாட்ஷா தெருவில் வேப்ப மரம் சரிந்து விழுந்தது. அப்போது அந்த பகுதியில் யாரும் செல்லாததால் அதிர்ஷ்டவசமாக விபத்து தவிர்க்கப்பட்டது. அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர்.

சூறாவளி காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் பல இடங்களில் விளம்பர பலகைகள் காற்றில் பறந்தன. ஈரோடு பஸ் நிலையத்தில் சத்திரோடு நுழைவு வாயிலில் வைக்கப்பட்ட பேரிகார்டுகள் (தடுப்பு கம்பிகள்) சாய்ந்து விழுந்தன. சூறாவளி காற்று காரணமாக ஈரோடு மாநகரில் பெரும்பாலான பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. சில இடங்களில் இரவு வரை மின்வினியோகம் செய்யப்படாததால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.


Related Tags :
Next Story