தாராபுரம் தில்லாபுரி அம்மன் கோவில் பூட்டை உடைத்து தங்கத்தாலி கொள்ளை


தாராபுரம் தில்லாபுரி அம்மன் கோவில் பூட்டை உடைத்து தங்கத்தாலி கொள்ளை
x
தினத்தந்தி 18 May 2019 4:15 AM IST (Updated: 18 May 2019 2:30 AM IST)
t-max-icont-min-icon

தாராபுரம் தில்லாபுரி அம்மன் கோவில் பூட்டை உடைத்து அம்மன் கழுத்தில் இருந்த தங்கத்தாலியை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்று விட்டனர்.

மூலனூர்,

வளம் குன்றா நகரங்களில் திருப்பூர் மாவட்டம் தாராபுரமும் ஒன்று. வற்றாத ஜீவநதியான அமராதி ஆறு ஓடும் பகுதி என்பதால் செழிப்புக்கு குறைவில்லை. அமராவதி ஆற்றின் கரையோரம் அடர்ந்த மரங்களுக்கு மத்தியில் தில்லாபுரி அம்மன் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்புரிகிறார். நினைத்ததை நிறைவேற்றும் அற்புத திருத்தலம் இந்த கோவில். 1,500 ஆண்டு பழமையான இந்த கோவிலுக்கு ஒருமுறை சென்று வந்தால் உள்ளமெல்லாம் அமைதி பெறும். ஒருமுறை... இந்த ஆலயத்துக்குள் புகுந்து கொள்ளையடித்தனர் சிலர். அம்மனின் பார்வையால் திருடியபொருட்களுடன் 150 அடி தூரத்தை கடப்பதற்குள் சிலையாகிப்போனார்கள், அவர்களது மாட்டு வண்டியும் பூமிக்குள் புதைந்து போனதாகவும், பல ஆண்டுகளுக்கு பிறகு... வண்டியுடன் மண்ணில் புதைந்த மாடு- நந்தியாகவும், திருடர்கள் திருடி சென்ற பொருட்களில் ஒன்றான பித்தளை அண்டா- லிங்கத்திருமேனியாகவும் காட்சி தந்தன என கோவில் தல வரலாறு கூறுகிறது. இந்த லிங்கத்தையும், நந்தியையும் கோவிலின் அருகில் இன்றைக்கும் தரிசிக்கலாம்.

இந்த ஆலயத்தின் மற்றொரு சிறப்பம்சம், மாசி மாதம் தில்லாபுரி அம்மன் நோன்பு விழாவையொட்டி நடைபெறும் விசேஷ பூஜை. தில்லாபுரி அம்மனை தரிசித்து, மனமுருக வேண்டினால், பிரார்த்தனைகள் நிறைவேறும் என்பது பக்தர்களின் ஐதீகம். இந்த கோவிலில் தினமும் காலை, மதியம் மற்றும் மாலை என 3 வேளை பூஜை நடந்து வருகிறது. பூசாரியாக தாராபுரத்தை சேர்ந்த துரைசாமி என்பவர் இருந்து வருகிறார்.

சக்தி வாய்ந்த அம்மன் கோவில் என்பதால் தினமும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய கோவிலுக்கு வருவார்கள். இந்த நிலையில் கடந்த 13-ந் தேதி அம்மனுக்கு பூஜை முடிந்ததும் கோவிலை பூட்டி விட்டு பூசாரி துரைசாமி சென்று விட்டார். பின்னர் மறுநாள் அம்மனுக்கு பூஜை செய்வதற்காக பூசாரி துரைசாமி கோவிலுக்கு சென்றார். அப்போது கோவிலின் பிரதான நுழைவு வாயில் கதவில் உள்ள பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் கோவிலுக்குள் சென்று பார்த்தபோது தில்லாபுரி அம்மன் எழுந்தருளியிருக்கும் கருவறை கதவின் பூட்டும் உடைக்கப்பட்டு கதவு திறந்து இருந்தது. இதனால் திடுக்கிட்ட பூசாரி, தில்லாபுரி அம்மன் கழுத்தில் அணிந்து இருந்த ஒரு பவுன் தாலி இருக்கிறதா? என்று பார்த்தார்.

அப்போது அம்மன் கழுத்தில் அணிவிக்கப்பட்டு இருந்த ஒரு பவுன் தாலியை காணவில்லை. மர்ம ஆசாமிகள் அந்த தங்கத்தாலியை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து கோவில் நிர்வாகி நாச்சிமுத்து தாராபுரம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு கொள்ளை சம்பவம் நடந்த கோவிலுக்கு சென்று பார்வையிட்டனர். அப்போது கோவிலுக்கு முன்பு வைக்கப்பட்டு இருந்த பெரியவேல் ஒன்று பிடுங்கப்பட்டு இருந்தது.

சம்பவத்தன்று இரவு கோவிலுக்கு சென்ற மர்ம ஆசாமிகள், கோவில் முன்பு இருந்த பெரிய வேலை எடுத்து அதன் மூலம் கோவில் பிரதான நுழைவு வாயில் கதவின் பூட்டை உடைத்துள்ளனர். பின்னர் அதே வேல் கொண்டு கருவறை கதவின் பூட்டையும் உடைத்து உள்ளே சென்று அம்மன் கழுத்தில் அணிந்து இருந்த ஒரு பவுன் தாலியை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரியவந்தது. ஆனால் கருவறையில் வைக்கப்பட்டுள்ள பூஜை சாமான்கள் எதுவும் கொள்ளைபோகவில்லை. மேலும் கோவில் உண்டியலும் உடைக்கப்படவில்லை. இது குறித்து தாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story