பள்ளி வாகனங்களுக்கு தகுதிச் சான்று வழங்க ஆய்வு கலெக்டர் தலைமையில் நடந்தது
பள்ளிகூட வாகனங்களுக்கு தகுதி சான்று வழங்க கலெக்டர் தலைமையில் ஆய்வு நடைபெற்றது.
சிவகங்கை,
பள்ளி மாணவ– மாணவிகளை ஏற்றி செல்லும் பள்ளி வாகனங்களில் அவசர காலத்தில் பயன்படுத்திட தேவையான சாதனங்கள் மற்றும் சிறப்பு வழிகள் உள்பட 23 வகையான விதிகளை கடைபிடிக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும் பள்ளி வாகனங்களை ஆண்டு தோறும் கலெக்டர் தலைமையில் வட்டார போக்குவரத்து அலுவலர், போலீஸ் சூப்பிரண்டு, முதன்மைகல்வி அலுவலர், தீயணைப்பு அலுவலர், தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்து தகுதி சான்றிதழ் அளித்தால் மட்டும் தான் வாகனங்களை இயக்க வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது.
இதனடிப்படையில் மாவட்ட வட்டார போக்குவரத்துத் துறையின் மூலம் தனியார் பள்ளி வாகனங்களில் வருடாந்திர ஆய்வுப் பணியின் தொடக்க நிகழ்ச்சி சிவகங்கை கலெக்டர் அலுவலக மைதானத்தில் நடைபெற்றது.
கலெக்டர் ஜெயகாந்தன், வட்டார போக்குவரத்து ஆய்வாளர் கல்யாண்குமார், சிவகங்கை துணை போலீஸ் சூப்பிரண்டு அப்துல்கபூர், பள்ளி கல்வி ஆய்வாளர் இருதயராஜ், தீயணைப்பு அலுவலர் ராதாகிருஷ்ணன், போக்குவரத்து ஆய்வாளர்கள், பிரபாகரன், முருகன் ஆகியோர் பள்ளிவாகனங்களில் இருக்கைள் சரியாக உள்ளதா, மாணவ–மாணவிகள் ஏறி இறங்கும் படிகள் உரிய அளவில் உள்ளதா, அவசர காலத்தில் பயன்படுத்த தீத்தடுப்பு கருவிகள் உரிய முறையில் உள்ளதா, அவசர கால வெளியேறும் வழிகள் அரசு நிர்ணயித்துள்ளபடி உள்ளதா என்று ஆய்வு செய்தனர்
பின்னர் கலெக்டர் கூறியதாவது:–மாவட்டத்தில் காரைக்குடி, தேவகோட்டை நீங்கலாக 7 தாலுகாக்களில் 63 பள்ளிகளிலுள்ள 236 பள்ளி வாகனங்கள் உள்ளன. இந்த வாகனங்கள் சிவகங்கையில் ஆய்வு செய்து தகுதி சான்று வழங்கப்படுகிறது. நேற்று முதல்கட்டமாக 101 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன. இந்த ஆய்வுடன் வாகன டிரைவர்களுக்கு கண் பரிசோதனையும் செய்யப்பட்டது.
இதேபோல் காரைக்குடி, தேவகோட்டை தாலுகாவில் உள்ள 57 பள்ளிகளில் 228 பள்ளி வாகனங்கள் உள்ளன. அனைத்து வாகனங்களுக்கும் வருகிற 31–ந்தேதி வரை ஆய்வு செய்யப்படும். ஆய்வின் பொது குறைபாடுகள் கண்டறியப்பட்டால் அவைகளை சரி செய்து கொண்டு வர வேண்டும். அப்படி செய்யாத வாகனங்களை இயக்க அனுமதி வழங்கப்பட மாட்டாது. இவ்வாறு அவர் கூறினார்.