உச்சிப்புளி அருகே நொச்சியூருணியில் குவிந்துள்ள அரியவகை நாமக்கோழிகள்
உச்சிப்புளி அருகே நொச்சியூருணியில் அரிய வகை நாமக்கோழிகள் குவிந்துள்ளன.
பனைக்குளம்,
ராமநாதபுரம் மாவட்டத்தில் கீழச்செல்வனூர், மேலச் செல்வனூர், தேத்தங்கால், காஞ்சிரங்குடி போன்ற ஊர்களில் பறவைகள் சரணாலயங்கள் உள்ளன. கடந்த ஆண்டோ போதிய அளவு பருவமழை பெய்யாததால் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கண்மாய்,நீர் நிலைகள் தண்ணீர் இல்லாமல் வறண்டு போய் காட்சியளித்து வருகின்றன.இதனால் பறவைகள், சரணாலங்களில் உள்ள பறவைகள் நீர் நிலைகளை தேடி அலைந்து வருகின்றன.
இந்நிலையில் உச்சிப்புளி அருகே உள்ள நொச்சியூருணியில் உள்ள நீர் நிலைகளில் பல வகை பறவைகள் குவிந்துள்ளன.குறிப்பாக நீண்ட தூரம் பறக்கும் தன்மை கொண்ட அரிய வகை நாமக்கோழி பறவைகள் அதிகஅளவில் குவிந்துள்ளன. நாமக்கோழிகள் ஒன்று சேர்ந்து பறப்பதும்,நீரில் நீண்ட நேரம் நீந்திய படியும்,தண்ணீருக்குள் மூழ்கிய படி இரை தேடி வருவதையும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மிகுந்த ஆச்சர்யத்துடன் பார்த்து ரசிக்கின்றனர்.
நாமக்கோழி பறவைகளுடன் உள்ளான் பறவைகள்,நீர்க்காகம்,கொக்குகள் உள்ளிட்ட பல பறவைகளும் குவிந்துள்ளன. மாவட்டத்தில் பல கண்மாய்களில் தண்ணீர் இல்லாத நிலையில்ப்பதால் நொச்சியூருணியில் உள்ள நீர் நிலையில் தண்ணீர் கிடப்பதால் இங்கு பலவிதமான பறவைகள் குவிந்துள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.