தயார் நிலையில் வாக்கு எண்ணிக்கை மையம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை அதிகாரிகள் ஆய்வு
ராமநாதபுரத்தில் உள்ள வாக்கு எண்ணும் மையம் வாக்கு எண்ணிக்கைக்காக தயார்நிலையில் உள்ளது. இங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கான பொதுத்தேர்தல் மற்றும் பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 18–ந்தேதி நடைபெற்றது. அதனை தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் வாக்காளர் சரிபார்க்கக்கூடிய எந்திரங்கள் அனைத்தும் வாக்கு எண்ணும் மையமான ராமநாதபுரம் அண்ணா பல்லைக்கழக பொறியியல் கல்லூரியில் அந்தந்த சட்டமன்ற தொகுதிகள் வாரியாக நிர்ணயிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டுள்ளன. இந்த மையத்திற்கு காவல்துறை, தமிழ்நாடு காவல்துறை சிறப்புப்பிரிவு, ஆயுதம் ஏந்திய துணை ராணுவ படை வீரர்கள் என 3 அடுக்கு காவல் பாதுகாப்பு வழங்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் வருகிற 23–ந்தேதி வாக்கு எண்ணும் பணிகள் நடைபெற உள்ளது. இதற்காக வாக்கு எண்ணிக்கை மையத்தில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது. இதன்படி மாவட்ட தேர்தல் அலுவலர் வீரராகவ ராவ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா ஆகியோர் வாக்கு எண்ணும் மையத்தில் தேர்தல் வாக்கு எண்ணும் நாள் தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது வாக்கு எண்ணும் நாளன்று ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி வாரியாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை பாதுகாப்பு அறையில் இருந்து வாக்கு எண்ணும் அறைக்கு கொண்டு செல்வதற்கான வழி, வேட்பாளர்கள், வேட்பாளர்களின் முகவர்கள், தேர்தல் அலுவலர்கள் வாக்கு எண்ணும் அறைக்கு வந்து செல்வதற்கான வழி என முறையே திட்டமிட்டு போதிய அளவு பேரிகார்டு தடுப்புகள் அமைப்பது குறித்து அலுவலர்களுக்கு அறிவுறுத்தினர்.
இந்த ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி, உதவி தேர்தல் அலுவலர்கள் மாவட்ட வழங்கல் அலுவலர் மதியழகன், வருவாய் கோட்டாட்சியர்கள் ராமநாதபுரம் சுமன், பரமக்குடி ராமன், அறந்தாங்கி சுப்பையா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் கயல்விழி, தனித்துணை ஆட்சியர் (முத்திரை) கார்த்திகைசெல்வி, மற்றும் ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் சிவகாமி, பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் குருதிவேல்மாறன், அண்ணா பல்கலைக்கழக அரசு பொறியியல் கல்லூரி முதல்வர் சேகர் உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.