ஜெயலலிதா மரணம் குறித்து இப்போது ஓ.பன்னீர்செல்வம் பேசாதது ஏன்? திருப்பரங்குன்றம் பிரசாரத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி


ஜெயலலிதா மரணம் குறித்து இப்போது ஓ.பன்னீர்செல்வம் பேசாதது ஏன்? திருப்பரங்குன்றம் பிரசாரத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி
x
தினத்தந்தி 18 May 2019 5:00 AM IST (Updated: 18 May 2019 4:14 AM IST)
t-max-icont-min-icon

“ஜெயலலிதா மரணம் குறித்து இப்போது ஓ.பன்னீர்செல்வம் பேசாதது ஏன்?” என்று திருப்பரங்குன்றம் தொகுதி பிரசாரத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

திருப்பரங்குன்றம்,

மதுரை திருப்பரங்குன்றம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் டாக்டர் சரவணனை ஆதரித்து நடிகர் உதயநிதி ஸ்டாலின் நேற்று பிரசாரம் செய்தார். அவர் திருப்பரங்குன்றம் தொகுதிக்கு உட்பட்ட விரகனூர், ஐராவதநல்லூர், சிந்தாமணி, அனுப்பானடி ஹவுசிங்போர்டு, வில்லாபுரம் ஹவுசிங்போர்டு, அவனியாபுரம், பெருங்குடி, வலையப்பட்டி உள்ளிட்ட இடங்களில் திறந்த வேனில் சென்று பிரசாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது:-

எனக்கு கடந்த 2 நாட்களாக உடல்நலம் சரியில்லாமல் காய்ச்சலாக இருந்தது. இந்த நிலையில் மக்கள் கூட்டத்தை பார்க்கின்றபோது காய்ச்சல் தானாகவே போய்விட்டது. தமிழகத்தில் நடப்பது எடப்பாடி பழனிசாமி ஆட்சி அல்ல. மோடியின் பினாமி ஆட்சி நடக்கிறது.

மோடியை வீட்டுக்கு அனுப்ப கடந்த மாதம் வாக்களித்து விட்டீர்கள். தற்போது நீங்கள் போடும் ஓட்டு எடப்பாடி பழனிசாமியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். மக்கள் வாக்களித்தது மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிற்கு தான். ஆனால் எடப்பாடி பழனிசாமி தற்போது குறுக்கு வழியில் ஆட்சியை பிடித்துள்ளார்.

தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு நடத்தி 13 பேரை கொன்ற மனிதாபிமானம் இல்லாத ஆட்சி தான் தற்போது நடக்கிறது. ஜெயலலிதா மரணத்தில் இன்றும் மர்மம் தொடர்கிறது.

ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருக்கிறது என்று கூறிய முதல் நபர் ஓ.பி.எஸ்.தான். ஆனால் அவர் தற்போது பதவி கிடைத்ததும் அமைதியாகி விட்டார். இப்போது அதுபற்றி நீங்கள் ஏன் பேசவில்லை? தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மங்கள் வெளிக்கொண்டு வரப்படும் என்று தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து, கல்வி-விவசாய கடன் ரத்து, மாணவர்களுக்கு இலவச ரெயில் பாஸ், ஜி.எஸ்.டி. வரி மாற்றியமைப்பு என்று வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன. அவை அனைத்தும் உடனடியாக நிறைவேற்றப்படும்.

22 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலிலும் தி.மு.க. வெற்றி பெறும். ஜூன் 3-ந்தேதி கலைஞர் பிறந்த நாள் அன்று தலைவர் ஸ்டாலின் தமிழக முதல்-அமைச்சராக பதவி ஏற்பார்.

இவ்வாறு அவர் பேசினார்.

பிரசாரத்தின்போது தொண்டர் ஒருவரது மகனுக்கு வெற்றிச்செல்வன் என்று உதயநிதி ஸ்டாலின் பெயர் சூட்டினார்.

Next Story