கரூர் அருகே மினிலாரி-கார் நேருக்கு நேர் மோதல்: ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் உள்பட 6 பேர் பலி


கரூர் அருகே மினிலாரி-கார் நேருக்கு நேர் மோதல்: ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் உள்பட 6 பேர் பலி
x
தினத்தந்தி 17 May 2019 11:13 PM GMT (Updated: 17 May 2019 11:13 PM GMT)

கரூர் அருகே மினிலாரி-கார் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் உள்பட 6 பேர் பரிதாபமாக இறந்தனர். கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக காரில் சென்றபோது இந்த துயர சம்பவம் நிகழ்ந்தது.

லாலாபேட்டை,

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள கண்ணமுத்தாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 35). இவரது மனைவி அருணா (வயது 27). இவர்களின் 1½ மாத ஆண்குழந்தை சுஷாந்த் கிருஷ்ணா. மற்றொரு மகன் ஜோஸ்வந்த் (1).

அருணாவின் தந்தை கீழமாயனூரை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (70). இவருடைய உறவினர்கள் அதே பகுதியை சேர்ந்த கோமதி (24), திண்டுக்கல் குஜிலியம்பாறையை சேர்ந்த கிஷோர் (12), கிருஷ்ணராயபுரம் சாலப்பட்டியை சேர்ந்த நவீன் (23).

இந்தநிலையில் நேற்று முன்தினம் கிருஷ்ணமூர்த்தியின் வீட்டில் பேரன் சுஷாந்த் கிருஷ்ணாவுக்கு பெயர் சூட்டுவிழா நடந்தது. இதைத் தொடர்ந்து நேற்று காலை கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவரது மகள் உள்பட 8 பேர் காரில், கீழமாயனூர் கிராமத்தில் இருந்து புறப்பட்டு திருச்சி மாவட்டம் முசிறி அருகே ஈச்சங்கோட்டை கிராமத்தில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக சென்றனர்.

அந்த காரை சிவக்குமார் (35) ஓட்டி சென்றார். மகாதானபுரம் அருகே பொய்கைபுதூரில் திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது, முன்னால் மற்றொரு வாகனம் சென்று கொண்டிருந்தது. அப்போது அதனை சிவக்குமார் முந்தி செல்ல முற்பட்டதாக கூறப்படுகிறது.

எதிரே தையல் எந்திரங்களை ஏற்றி கொண்டு சென்னையில் இருந்து கரூர் நோக்கி மினிலாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக அந்த மினிலாரியும்-காரும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன. இதில் மினிலாரியின் அடிப்பகுதியில் சிக்கிய கார் அப்பளம்போல் நொறுங்கியது. காரில் இருந்த கிருஷ்ணமூர்த்தி, கிஷோர் ஆகியோர் காரின் இடிபாடுகளில் சிக்கி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

இந்த விபத்தில் குழந்தைகள் சுஷாந்த் கிருஷ்ணா, ஜோஸ்வந்த், சிவக்குமார், கோமதி, அருணா, நவீன் ஆகிய 6 பேரும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர். இதைக்கண்ட அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் உடனடியாக லாலாபேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் படுகாயமடைந்த 6 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவ இடத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விக்ரமன், குளித்தலை துணை போலீஸ் சூப்பிரண்டு சுகுமார், லாலாபேட்டை இன்ஸ்பெக்டர் ரமாதேவி ஆகியோர் நேரில் வந்து பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். மேலும் விபத்தில் இறந்த கிருஷ்ணமூர்த்தி, கிஷோர் ஆகியோரது உடல்கள் பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. தேசிய நெடுஞ்சாலையில் விபத்துக்குள்ளான கார், மினிலாரி ஆகியவை அப்படியே நின்றதால் அந்த வழியில்சிறிது நேரம் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பின்னர் பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு விபத்துக்குள்ளான வாகனங்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டன.

இதற்கிடையே கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த அருணா, அவரது குழந்தைகள் சுஷாந்த் கிருஷ்ணா, ஜோஸ்வந்த் மற்றும் நவீன் ஆகிய 4 பேர் அடுத்தடுத்து உயிரிழந்ததால் இந்த விபத்தில் சாவு எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது. அவர்களது உடல்கள் கரூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு, பிரேத பரிசோதனை கூடத்தில் வைக்கப்பட்டன.

இதுகுறித்து அறிந்ததும் கிருஷ்ணமூர்த்தியின் உறவினர்கள் பதறி அடித்துகொண்டு கரூர் அரசு மருத்துவமனைக்கு வந்தனர். பின்னர் விபத்தில் இறந்தவர்களின் உடல்களை பார்த்து அவர்கள் கதறி துடித்தது காண்போரை கண்கலங்க செய்யும் விதமாக இருந்தது.

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த சிவக்குமார், கோமதி ஆகியோர் மட்டும் மேல்சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். லாலாபேட்டை அருகே விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த வர்கள் உள்பட 6 பேர் உயிரிழந்த கோர சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த விபத்து குறித்து லாலாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய மினிலாரி டிரைவர் தோகைமலை அருகே உள்ள மேலவெளியூரை சேர்ந்த முருகேசன் (27) என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story