பள்ளி வாகனங்களை 31-ந் தேதிக்குள் ஆய்வு செய்ய வேண்டும் கலெக்டர் எச்சரிக்கை


பள்ளி வாகனங்களை 31-ந் தேதிக்குள் ஆய்வு செய்ய வேண்டும் கலெக்டர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 19 May 2019 4:00 AM IST (Updated: 18 May 2019 9:34 PM IST)
t-max-icont-min-icon

பள்ளி வாகனங்களை 31-ந் தேதிக்குள் ஆய்வு செய்ய வேண்டும் என்று கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திருவள்ளூர்,

திருவள்ளூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் அனைத்து பள்ளி வாகனங்களின் உறுதிதன்மை மற்றும் பாதுகாப்பு வசதிகளை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் நேற்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் ஆய்வுக்காக கொண்டு வரப்பட்ட ஒவ்வொரு பள்ளி வாகனங்களிலும் சென்று அங்கு மாணவர்களின் வசதிக்காக இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளதா?, முதலுதவி சிகிச்சை பெட்டி வைக்கப்பட்டுள்ளதா?, தீயணைப்பு கருவி, வேகக்கட்டுப்பாட்டு கருவி, பள்ளி மாணவ- மாணவிகள் ஏறுவதற்கு வசதியாக படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளதா? என்று பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டார். பின்னர் கலெக்டர் நிருபர் களிடம் கூறியதாவது:-

தமிழ்நாடு மோட்டார் வாகன விதியின்படியும், போக்குவரத்து ஆணையர் அறிவுறுத்தலின்படியும் ஆண்டுதோறும் மே மாதத்தில் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் தங்கள் பள்ளி வாகனங்களை தங்களது பள்ளி எல்லைக்குட்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஆய்வுக்குட்படுத்தி சான்றுகள் பெற வேண்டும்.

அதைத்தொடர்ந்து நேற்று திருவள்ளூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டது. திருவள்ளூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்குட்பட்ட 69 பள்ளிகளில் 259 பள்ளி வாகனங்களும், திருத்தணி பகுதி அலுவலகம் எல்லையில் உள்ள 33 பள்ளிகளில் 189 பள்ளி வாகனங்களும், பூந்தமல்லி வட்டார போக்குவரத்து அலுவலக எல்லைக்குட்பட்ட 66 பள்ளிகளில் 343 பள்ளி வாகனங்களும், செங்குன்றம் வட்டார போக்குவரத்து அலுவலக எல்லைக்குட்பட்ட 28 பள்ளிகளில் 180 பள்ளி வாகனங்களும், கும்மிடிப்பூண்டி பகுதி அலுவலக எல்லைக்குட்பட்ட 8 பள்ளிகளில் 90 பள்ளி வாகனங்கள் என மொத்தம் 204 பள்ளிகளில் 1,061 பள்ளி வாகனங்கள் உள்ளது.

மேற்கண்ட வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் அந்தந்த பகுதியில் உள்ள பள்ளி வாகனங்களை தங்களுக்கு என குறிப்பிடப்பட்டுள்ள தேதி மற்றும் இடத்தில் பள்ளி வாகனங்களை முறையாக ஆய்வுக்குட்படுத்தி சான்றுகளை பெற்றுக்கொள்ளலாம். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் தங்கள் பள்ளி வாகனங்களை உரிய முறையில் தயார்படுத்தி 31-ந்தேதிக்குள் ஆய்வுக்குட்படுத்தி சான்றுகள் பெறவேண்டும். சோதனைக்குட்படுத்தி வருகிற 31-ந்தேதிக்குள் சான்றுகள் பெறப்படாத பள்ளி வாகனங்கள் அதன் பின்னர் பொதுசாலையிலோ பள்ளியிலோ பயன்படுத்த அனுமதி கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின் போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனைவர் ராஜேந்திரன், துணை காவல் கண்காணிப்பாளர் கங்காதரன், திருவள்ளூர் வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெயபாஸ்கரன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் காவேரி, ரவிக்குமார் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Next Story