மாவட்டத்தில் பள்ளி செல்லாமல் இடைநின்ற 1,093 மாணவர்கள் கண்டுபிடிப்பு


மாவட்டத்தில் பள்ளி செல்லாமல் இடைநின்ற 1,093 மாணவர்கள் கண்டுபிடிப்பு
x
தினத்தந்தி 18 May 2019 10:30 PM GMT (Updated: 18 May 2019 4:09 PM GMT)

தர்மபுரி மாவட்டத்தில் பள்ளிக்கு செல்லாமல் இடையில் நின்ற 1,093 மாணவர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.

தர்மபுரி, 

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்திட்டம் சார்பில் தர்மபுரி மாவட்டத்தில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி நடத்தப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம் 15-ந்தேதி தொடங்கிய இந்த கணக்கெடுப்பு பணியில் அனைத்து வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள், பயிற்றுனர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர். தர்மபுரி, பென்னாகரம், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, காரிமங்கலம், மொரப்பூர், நல்லம்பள்ளி, பாலக்கோடு ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் கிராமங்களுக்கு சென்ற கணக்கெடுப்பாளர்கள் பள்ளி செல்லாத குழந்தைகள், பள்ளி இடைநின்ற குழந்தைகள் குறித்த விவரங்களை சேகரித்தனர்.

6 முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகள் மற்றும் 15 முதல் 18 வயது வரை உள்ள குழந்தைகள் குறித்த விவரங்கள் தனித்தனியே சேகரிக்கப்பட்டன. இந்த கணக்கெடுப்பு பணி தற்போது முடிவடைந்து உள்ளது.

இந்த கணக்கெடுப்பின்படி தர்மபுரி ஊராட்சி ஒன்றியத்தில் 6 முதல் 18 வயது வரை உள்ளவர்களில் 115 பேர் பள்ளி செல்லாமல் இடையில் நின்றது தெரியவந்துள்ளது. இதேபோல் ஊராட்சி ஒன்றிய வாரியாக அரூரில் 139 பேரும், பென்னாகரத்தில் 185 பேரும், பாலக்கோட்டில் 192 பேரும், காரிமங்கலத்தில் 214 பேரும் பள்ளி செல்லாமல் இடையில் நின்றிருப்பது தெரியவந்தது.

நல்லம்பள்ளி, மொரப்பூர், பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட ஊராட்சி ஒன்றியங்கள் உள்பட மாவட்டம் முழுவதும் மொத்தம் பள்ளி செல்லாமல் இடைநின்ற 1093 மாணவர்கள் கணக்கெடுப்பில் கண்டறியப்பட்டு உள்ளனர்.

மாற்றுத்திறனாளிகள் குறித்த விவரங்களும் கணக்கெடுப்பில் சேகரிக்கப்பட்டு உள்ளன. இந்த கணக்கெடுப்பின் மூலம் கண்டறியப்பட்ட பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் பள்ளி இடைநின்ற குழந்தைகளை நடப்பு கல்வி ஆண்டில் பள்ளிகள், உண்டு உறைவிடப்பள்ளிகள் மற்றும் இணைப்பு மையங்களில் மீண்டும் சேர்த்து கல்வி கற்பிக்க ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டம் சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

இதேபோல் மாற்றுத்திறனாளி குழந்தைகளை பள்ளியில் சேர்க்கவும், உபகரணங்களை தேவைப்படுவோருக்கு வழங்க பரிந்துரை செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்திட்டம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story