கோட்சேவை ஆதரித்து கருத்து கூறிய பா.ஜனதா தலைவர்களை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்


கோட்சேவை ஆதரித்து கருத்து கூறிய பா.ஜனதா தலைவர்களை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 19 May 2019 4:45 AM IST (Updated: 18 May 2019 11:24 PM IST)
t-max-icont-min-icon

கோட்சேவை ஆதரித்து கருத்து கூறிய பா.ஜனதா தலைவர்களை கண்டித்து காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பெங்களூரு,

மத்திய பிரதேசத்தில் பா.ஜனதா வேட்பாளர் பிரக்யாசிங் தாக்குர், மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சே தேசபக்தர் என்று கூறினார். அவரது கருத்தை ஆதரித்து கர்நாடகத்தை சேர்ந்த மத்திய மந்திரி அனந்தகுமார் ஹெக்டே, பா.ஜனதா எம்.பி. நளின்குமார் கட்டீல் ஆகியோர் டுவிட்டரில் பதிவிட்டனர். இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. பா.ஜனதாவும் கண்டனம் தெரிவித்தது.

கோட்சேவுக்கு ஆதரவு தெரிவித்த மத்திய மந்திரி அனந்தகுமார் ஹெக்டே மற்றும் நளின்குமார் கட்டீல் எம்.பி. ஆகியோரை கண்டித்து மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் கூறினார்.

அதன்படி கர்நாடகத்தில் காங்கிரஸ் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெங்களூரு அனந்தராவ் சர்க்கிளில் மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கோட்சேவை ஆதரித்து கருத்து கூறிய பிரக்யாசிங் தாக்குர், அனந்தகுமார் ஹெக்டே, நளின்குமார் கட்டீல் ஆகியோரை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் தினேஷ் குண்டுராவ் பேசியதாவது:-

ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜனதா கட்சியினர் மகாத்மா காந்தியின் விரோதிகள். அதை அவர்கள் பகிரங்கமாக கூறுவது இல்லை. ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் இதுபற்றி நிர்வாகிகள் விவாதித்தபோது, காந்தி நாட்டை சீரழித்துவிட்டார் என்று பேசினர். இதை அவர்கள் வெளியே சொல்லவில்லை.

கோட்சே தேசபக்தர் என்று கூறியதன் மூலம் பா.ஜனதாவின் உண்மையான சாயம் என்ன என்பது தெரிந்துவிட்டது. பிரக்யாசிங் தாக்குர் தீவிரவாத வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர். அவருக்கு பா.ஜனதா டிக்கெட் வழங்கியுள்ளது.

நாடு ஒற்றுமையாக இருப்பதை பா.ஜனதாவினர் விரும்பவில்லை. நாட்டில் ரத்த ஆறு ஓட வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். அரசியலுக்கு கடவுளை பயன்படுத்துகிறார்கள். ராமர் பெயரில் ஓட்டுகளை பெற்று ஆட்சிக்கு வந்தனர்.

நாட்டுக்காக காங்கிரஸ் தலைவர்கள் உயிர்த்தியாகம் செய்துள்ளனர். பா.ஜனதாவில் இத்தகைய தியாகம் செய்தவர்கள் யார் உள்ளனர்?. 1987-ம் ஆண்டு டிஜிட்டல் கேமரா பயன்படுத்தியதாக மோடி கூறுகிறார். ஆனால் 1996-ம் ஆண்டு டிஜிட்டல் கேமரா இந்தியாவுக்கு வந்தது.

அதே போல் பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்திய விஷயத்தில் மேகக்கூட்டங்கள் இருப்பதால், பாகிஸ்தானின் ரேடார் கண்காணிப்பில் இருந்து தப்பிக்க முடியும் என்று அவர் கூறுகிறார். பொய்களை தைரியமாக கூறுவதில் மோடி வல்லவர். இனி நாட்டு மக்களை அவர் ஏமாற்ற முடியாது. இவ்வாறு தினேஷ் குண்டுராவ் கூறினார்.

Next Story