சேலத்தில் சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் 3 வாலிபர்களுக்கு போலீசார் வலைவீச்சு


சேலத்தில் சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் 3 வாலிபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
x
தினத்தந்தி 18 May 2019 10:00 PM GMT (Updated: 18 May 2019 6:54 PM GMT)

சேலத்தில் சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த 3 வாலிபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

சேலம், 

சேலம் புதிய பஸ்நிலையம் அருகே உள்ள ஒரு ஜவுளிக் கடையில் 17 வயதான சிறுமி வேலை பார்த்து வந்தாள். கடந்த 10-ந் தேதி வழக்கம்போல் வேலைக்கு சென்ற அவள், இரவில் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் சிறுமி எங்கு சென்றாள்? போன்ற விவரம் ஏதும் தெரியவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமியின் பெற்றோர், இதுபற்றி பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

அதில், தங்களது மகளை ஒரு பெண் கடத்தி சென்றிருக்க வேண்டும். அவர் மீது சந்தேகம் இருக்கிறது. தாரமங்கலம், மேச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் தேடிபார்த்தபோது, எனது மகள் அந்த பெண்ணுடன் சுற்றித்திரிந்ததாக சிலர் எங்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் அந்த பெண்ணிடம் இருந்து எங்களது மகளை மீட்டுத்தர வேண்டும், என கூறியிருந்தனர்.

ஆனால் பள்ளப்பட்டி போலீசார், சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு செல்லுமாறு அந்த சிறுமியின் பெற்றோரிடம் கூறி அவர்களை அனுப்பி வைத்தனர். இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தும், மகளை மீட்க முடியாமலும் தவித்த அவரது பெற்றோர், சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து புகார் மனு அளித்தனர். இதையடுத்து பள்ளப்பட்டி போலீசார், சிறுமி காணவில்லை என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர்.

இதற்கிடையே, காணாமல் போனதாக கூறப்பட்ட சிறுமி மீண்டும் அதே ஜவுளிக் கடைக்கு வேலைக்கு வந்த தகவலை அறிந்த போலீசார், பெற்றோருடன் அங்கு சென்றனர். பின்னர் சிறுமியை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். அதன்பிறகு கோர்ட்டில் ஆஜர்படுத்தி மகளிர் காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டாள்.

இந்த நிலையில் சிறுமியின் பெற்றோர் நேற்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து அதிகாரிகளை சந்தித்து பரபரப்பு புகாரை தெரிவித்தனர். அதாவது தங்களது மகளை 3 வாலிபர்கள் கடத்தி சென்று, பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறி, கண்ணீர் விட்டு கதறி அழுதனர். அதன்பேரில் சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்த 3 வாலிபர்கள் யார்? அவர்கள் எந்த பகுதியை சேர்ந்தவர்கள்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதோடு அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கூறுகையில், எங்களது மகள், வேலைக்கு சென்ற போது, மோட்டார் சைக்கிள்களில் 3 பேர் வந்ததாகவும், அவர்கள் உனது பெற்றோர் விபத்தில் சிக்கிவிட்டார்கள் என்றும், இதனால் உடனடியாக உன்னை அழைத்து வர சொன்னார்கள் என்றும் கூறினர். இதனால் பதற்றத்தில் அவளும் அவர்களுடன் சென்றாள். அப்போது, கைக்குட்டையில் மயக்க மருந்தை தடவி அவளது முகத்தில் வைத்தனர். இதனால் சுமார் ½ மணி நேரம் மயக்கத்தில் இருந்தாள். அதன்பிறகு 3 பேர் ஒரு வீட்டுக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துவிட்டனர் என்று தெரிவித்தாள். எனவே, அவர்களை கண்டுபிடித்து உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும், என கூறினார்கள்.

Next Story