தஞ்சை நாடாளுமன்ற, சட்டசபை தொகுதி வாக்கு எண்ணும் மையத்தை சுற்றி தடுப்புக்கட்டைகள் அமைப்பு


தஞ்சை நாடாளுமன்ற, சட்டசபை தொகுதி வாக்கு எண்ணும் மையத்தை சுற்றி தடுப்புக்கட்டைகள் அமைப்பு
x
தினத்தந்தி 18 May 2019 11:00 PM GMT (Updated: 18 May 2019 7:21 PM GMT)

தஞ்சை நாடாளுமன்ற, சட்டசபை தொகுதி வாக்கு எண்ணும் மையத்தை சுற்றி தடுப்புக்கட்டைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. அனுமதிக்கப்பட்டவர்களை தவிர மற்றவர்கள் உள்ளே வருவதை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர்,

தஞ்சை நாடாளுமன்ற தொகுதி தேர்தல் மற்றும் தஞ்சை சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 18-ந்தேதி நடைபெற்றது. தேர்தல் முடிவடைந்ததும் வாக்குப்பதிவு எந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் வாகனங்களில் ஏற்றி வரப்பட்டன. இந்த வாக்குப்பெட்டிகள் தஞ்சை குந்தவை நாச்சியார் மகளிர் கல்லூரியில் வைக்கப்பட்டு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணிக்கை வருகிற 23-ந்தேதி நடைபெறுகிறது. தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் தஞ்சை, திருவையாறு, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னார்குடி ஆகிய 6 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்த 6 சட்டசபை தொகுதியிலும் பதிவான வாக்குகள் தனித்தனி அறைகளில் வைக்கப்பட்டுள்ளன. இதே போல் தஞ்சை சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு எந்திரங்களும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடங்களில் இரும்பு தடுப்புக்கம்பிகள், தடுப்புக்கட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் ஒவ்வொரு மையத்திலும் வாக்கு எண்ணுவதற்கான மேஜைகளும் போடப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் போது அனுமதிக்கப்பட்ட முகவர்கள், உரிய அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள்.

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அன்று பார்வையாளர்கள், அரசியல் கட்சியினர் வாக்கு எண்ணும் மையத்தின் முன்பு அதிக அளவில் கூடுவார்கள். அவர்கள் உள்ளே வராமல் இருக்கவும், உரிய முறையில் பாதுகாப்பை மேற்கொள்ளவும், தடுப்புக்கட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன. குந்தவை நாச்சியார் மகளிர் கல்லூரி முன்பு சாலையின் இருபுறமும், இந்த தடுப்புக்கட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பகுதியிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட உள்ளது.

Next Story