அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை கோரி மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் போலீசில் புகார்


அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை கோரி மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் போலீசில் புகார்
x
தினத்தந்தி 19 May 2019 4:30 AM IST (Updated: 19 May 2019 1:42 AM IST)
t-max-icont-min-icon

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை கோரி மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் புதுக்கோட்டை டவுன் போலீசில் புகார் அளித்தனர்.

புதுக்கோட்டை,

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் இந்துக்கள் மீது விமர்சனம் செய்து பேசியதை தொடர்ந்து நாடு முழுவதும் பல்வேறு அமைப்புகளின் சார்பில் விமர்சனங்கள் எழுந்து உள்ளன. மேலும் அவர் மீது பல்வேறு தரப்பினர் தனித்தனியே போலீஸ் நிலையங்களில் புகார் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ஓட்டப்பிடாரம் இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது கமல்ஹாசனை கண்டித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் கமல்ஹாசன் நாக்கை அறுக்க வேண்டும் என கூறியதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து வருகின்றனர். இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் புதுக்கோட்டை மாவட்ட உறுப்பினர் மூர்த்தி நேற்று கட்சி நிர்வாகிகளுடன் வந்து புதுக்கோட்டை டவுன் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார்.

அமைச்சர் மீது நடவடிக்கை

அந்த புகாரில், தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடந்த 13.05.2019 அன்று தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் தொகுதி சட்டமன்ற இடைதேர்தல் பிரசாரத்தின்போது நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கண்ணிய குறைவாகவும், வன்முறையை தூண்டும் வகையிலும், மிரட்டல் விடுக்கும் வகையிலும், இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு முரணாகவும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நாக்கினை அறுக்க வேண்டும் என கூறினார். இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படையில் கருத்து சொல்ல ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் உரிமை உண்டு. தேர்தல் பிரசாரத்தின் போது கமல்ஹாசன் தெரிவித்த கருத்துக்கு பதில் அளிக்க அமைச்சர் உள்ளிட்ட அனைத்து குடிமகனுக்கும் உரிமை உள்ளது. ஆனால் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, கமல்ஹாசன் நாக்கை அறுப்பேன் என பதில் அளித்துள்ளார். எனவே அத்துமீறி பதவியினை துஷ்பிரயோகம் செய்து பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். 

Next Story