பள்ளி படிப்பை இடையில் நிறுத்தியவர்கள் 8-ம் வகுப்பில் சேர்ந்து படிக்க வாய்ப்பு
ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் பள்ளி படிப்பினை இடையில் நிறுத்தியவர்கள் 8-ம் வகுப்பு படிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி,
புதுவை மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவன முதல்வர் நடனசபாபதி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
இந்திய அரசின் தேசிய திறந்தவெளிப் பள்ளி நிறுவனம், அடிப்படை கல்வி திட்டம் என்னும் திட்டத்தினை செயல்படுத்தி வருகின்றது. இத்திட்டத்தின் மூலம் பள்ளிக்கு சென்று கற்க இயலாதோரும், பள்ளிபடிப்பை இடையில் நிறுத்தியவர்களும் சேர்ந்து பயனடையலாம். இக்கல்வி திட்டம் புதுச்சேரி அரசின் பள்ளிக்கல்வி துறையின் கீழ் இயங்கும் மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனத்தின் வழியாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதில் பள்ளிக்கல்விக்கு இணையாக 8-ம் வகுப்பு கல்வி வழங்கப்படுகிறது. மேலும் இப்படிப்பில் தேர்ச்சி அடைவோர் தமிழ்நாடு அரசு தேர்வுத்துறை நடத்தும் 10-ம் வகுப்பு தேர்வை எழுதலாம். பொதுத்துறை, தனியார் நிறுவனங்கள், அரசுத்துறைகளில் பணியாற்றும் ஊழியர்களும் இதில் சேர்ந்து பயனடையலாம்.
இக்கல்வி திட்டத்தில் சேர ஜூலை 31-ந்தேதி குறைந்தபட்சம் 14 வயது இருக்கவேண்டும். இதுவரை பள்ளி படிப்பில் சேராதவரும் விண்ணப்பிக்கலாம். இப்படிப்பில் சேர விரும்புவோர் புதுவை லாஸ்பேட்டை மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனத்தில் ரூ.50 செலுத்தி சேர்க்கை விண்ணப்பம் பெறலாம்.
சேர்க்கை விண்ணப்பம் ஜூன் மாதம் 10-ந்தேதி வரை வழங்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை உரிய நகல் சான்றிதழ்களுடன் இந்நிறுவனத்தில் அன்று மாலை 5 மணிக்குள் சமர்ப்பித்தல் வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story