சர்ச்சை ஏற்படுத்தும் வகையில் கமல்ஹாசன் தொடர்ந்து பேசினால் அடுத்த தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி இல்லாமல் போய்விடும்


சர்ச்சை ஏற்படுத்தும் வகையில் கமல்ஹாசன் தொடர்ந்து பேசினால் அடுத்த தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி இல்லாமல் போய்விடும்
x
தினத்தந்தி 18 May 2019 11:00 PM GMT (Updated: 18 May 2019 8:38 PM GMT)

சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் கமல்ஹாசன் தொடர்ந்து பேசினால் அடுத்த தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி இல்லாமல் போய்விடும் என்று திருச்சியில் நடிகர் எஸ்.வி.சேகர் பேசினார்.

திருச்சி,

சமுதாயத்தில் பொதுப்பிரிவினருக்கு கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கிய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்கும் விழா திருச்சியில் ஸ்ரீமதி இந்திராகாந்தி கல்லூரி அரங்கத்தில் நேற்று மாலை நடந்தது. விழாவுக்கு நடிகர் எஸ்.வி.சேகர் தலைமை தாங்கினார். பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மீனா, புதுக்கோட்டை குடுமியான்மலை சவரிமுத்து அருள்தாஸ் நினைவு அறக்கட்டளையின் மேலாண்மை அறங்காவலர் மற்றும் முதன்மை செயலாக்க இயக்குனர் டாக்டர் ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில் நடிகர் எஸ்.வி.சேகர் பேசியதாவது:-

பொருளாதார அடிப்படையில் தான் இடஒதுக்கீடு கொண்டு வரவேண்டும் என்று எம்.ஜி.ஆர். நினைத்தார். அவரது ஆசையை மோடி நிறைவேற்றி இருக்கிறார். இப்போது மோடி அஸ்திவாரம் தான் போட்டு இருக்கிறார். அதை கண்டே பலர் ஆடிப்போய் இருக்கிறார்கள். பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் திருடர்கள், கடத்தல்காரர்களுக்கு தான் பாதிப்பு. திருடர்களுக்கு போலீசை கண்டால் பிடிக்காது. அதனால் தான் எதிர்க்கட்சிகளுக்கு மோடியை பிடிக்கவில்லை. வெறும் அரசியல் மட்டுமே செய்து கொண்டு இருக்கக்கூடாது. அடுத்த தலைமுறையை பார்க்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். அதற்காக ஓடி கொண்டு இருக்கிறவர்களை தட்டி விடக்கூடாது.

தமிழ்நாட்டில் மோடியை பற்றி பேசுவது அனைத்தும் கற்பனை கதைகள். மோடி ஓட்டு வங்கிக்காக அரசியல் செய்பவர் கிடையாது. தேர்தலில் மோடி 300 இடங்களுக்கு மேல் பெற்று மீண்டும் பிரதமராக வருவார். மோடி கொண்டு வந்த பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டை அங்கீகரித்த தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும் இந்த நேரத்தில் பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறோம். இந்து மதத்தை கேவலப்படுத்தக்கூடிய எந்த செயலையும் மற்ற மதத்தினர் ரசிப்பது இல்லை என்பது தான் உண்மை.

இந்துக்கள் பொறுமைசாலிகள். ஆனால் சாதுமிரண்டால் காடு கொள்ளாது என்பதை 23-ந் தேதி நாடாளுமன்ற தேர்தலுக்கான ஓட்டு எண்ணும்போது தெரிந்து கொள்வார்கள். கோட்சேவை பற்றி கமல் பேசி வருவது தேவையற்றது. நான்கூட முன்பு கமல்ஹாசன் தேர்தலில் 6 சதவீத வாக்குகளை பெற்று தவிர்க்க முடியாத இடத்துக்கு வருவார் என்று கூறி இருந்தேன். ஆனால் அவர் சர்ச்சை ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து பேசி கொண்டு இருந்தால் அடுத்த தேர்தலில் கமல்ஹாசனின் கட்சியே இல்லாமல் போய்விடும்.

இவ்வாறு அவர் பேசினார். விழாவில் பல்வேறு சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர். 

Next Story