திருச்சியில் பலத்த காற்றுடன் மழை: மின்தடையால் இரவில் தூங்க முடியாமல் பொதுமக்கள் அவதி


திருச்சியில் பலத்த காற்றுடன் மழை: மின்தடையால் இரவில் தூங்க முடியாமல் பொதுமக்கள் அவதி
x
தினத்தந்தி 18 May 2019 11:00 PM GMT (Updated: 18 May 2019 8:42 PM GMT)

திருச்சியில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் மின்தடை ஏற்பட்டு பொதுமக்கள் இரவில் தூங்க முடியாமல் அவதிப்பட்டனர்.

திருச்சி,

திருச்சியில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி எடுத்து வருகிறது. தினமும் 105 டிகிரிக்கு மேல் வெயில் அளவு பதிவாகி உள்ளது. வெயிலின் கொடுமைக்கு, பலர் வீட்டை விட்டு வெளியே வராமல் முடங்கியே கிடக்கிறார்கள். அன்றாடம் பிழைப்பு நடத்துபவர்கள், சாலையோர வியாபாரிகள் வேறுவழியின்றி வெயிலின் தாக்கத்தை தாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

குறிப்பாக, இருசக்கர வாகன ஓட்டிகள்தான் வெயிலின் கொடுமைக்கு அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். மோட்டார் சைக்கிளில் செல்லும்போது அனல்காற்று வீசுவதால் அவதி அடைந்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 7 மணி முதல் சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக, திருச்சி மாநகரின் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை கொட்டியது. மழையால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்றாலும், பலத்த காற்றுக்கு பல இடங்களில் மரக்கிளைகள் மின் கம்பியில் விழுந்ததால் மின் தடை ஏற்பட்டது. மேலும் திருச்சி அய்யப்பன் கோவில் அருகே மின்மாற்றி ஒன்று தீப்பிடித்து எரிந்தது. சில இடங்களில் மின்கம்பம் சாய்ந்தது.

திருச்சி டி.வி.எஸ்.டோல்கேட் அருகே முடுக்குப்பட்டி பிள்ளையார்கோவில் முதல் தெருவில் மின்கம்பம் ஒன்று, உடைந்து விழுந்தது. இதனால், அப்பகுதி முழுவதும் இருளில் மூழ்கியது. இரவு வேளை என்பதால், மின்வாரிய அதிகாரிகளால் உடனடியாக எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை.

மழை மற்றும் பலத்த காற்றுக்கு திருச்சி மாநகரில் மத்திய பஸ் நிலையம், கிராப்பட்டி, எடமலைப்பட்டி புதூர், பாரதி மின்நகர், அருணாசலம் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. சுமார் 2 மணி நேரம் கழித்து சில இடங்களில் மின்தடை சரிசெய்யப்பட்டது. பின்னர் மீண்டும் தடை ஏற்பட்டது. இதனால், விடிய விடிய பொதுமக்கள் மின்சாரம் இன்றி தூங்க முடியாமல் அவதிப்பட்டனர்.

இரவு வேளையில் பொதுமக்கள் தரப்பில் மின்வினியோகம் குறை தொடர்பான புகார் எண்ணுக்கு தொடர்பு கொண்ட போது யாரும் போனை எடுத்து பேசவில்லை என்றும் குற்றம்சாட்டப்பட்டது. இந்த நிலையில் நேற்று காலை 7 மணிக்கு பின்னரே மின்தடை சரி செய்யப்பட்டு வினியோகிக்கப்பட்டது. ஆனாலும், திருச்சி மாநகரில் நேற்றும் சில இடங்களில் மின்தடையில் இருந்து பொதுமக்கள் மீளவில்லை.

திருச்சி ஜங்சனில் நேற்று முன்தினம் முதல் நேற்று காலை வரை 30 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. திருச்சி டவுனில் 6 மில்லி மீட்டரும், விமான நிலையத்தில் 23.50 மில்லி மீட்டரும், பொன்மலையில் 25 மில்லி மீட்டரும் மழை பெய்துள்ளது.

திருச்சி மாவட்டத்தில் புறநகர் பகுதிகளான கல்லக்குடி, லால்குடி, புள்ளம்பாடி, தேவிமங்கலம், சமயபுரம், வாத்தலை அணைக்கட்டு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை பெய்யவில்லை.

Next Story