நிலத்தடி நீர்மட்டம் உயர ரூ.25 லட்சத்தில் அய்யன்குட்டை தூர்வாரப்பட்டது


நிலத்தடி நீர்மட்டம் உயர ரூ.25 லட்சத்தில் அய்யன்குட்டை தூர்வாரப்பட்டது
x
தினத்தந்தி 18 May 2019 10:30 PM GMT (Updated: 18 May 2019 10:06 PM GMT)

நிலத்தடி நீர்மட்டம் உயர ரூ.25 லட்சம் செலவில் கோவை அருகே உள்ள அய்யன்குட்டை தூர்வாரப்பட்டது.

கோவை,

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை அடுத்த மாதம் (ஜூன்) முதல் வாரத்தில் தொடங்குகிறது. அதற்கு முன்னதாக குளங்களை தூர்வாரும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. கோவை சிறுதுளி அமைப்பு சார்பில் கடந்த 2018-19-ம் ஆண்டுகளில் 3 குளங்கள் தூர்வாரப்பட்டன.

மேலும் கோவை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் 13 ஆயிரம் மரக்கன்றுகளும் நடப்பட்டன. இதன் தொடர்ச்சியாக கோவையை அடுத்த சுண்டக்காமுத்தூர் பகுதியில் உள்ள அய்யன்குட்டை இந்த அமைப்பு சார்பில் தூர்வாரப்பட்டது. கோவை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த குளத்தை தூர்வாரும் பணி கடந்த மார்ச் 5-ந் தேதி தொடங்கி சில நாட்களுக்கு முன்பு முடிவடைந்தது.

இந்த பணிகளை சிறுதுளி அமைப்பின் நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன் முன்னிலையில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார். தனியார் நிறுவனம் சார்பில் ரூ.25 லட்சம் செலவில் இந்த பணிகள் தற்போது நிறைவடைந்து உள்ளன.

இதுகுறித்து சிறுதுளி அமைப்பின் நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன் கூறியதாவது:-

சுண்டக்காமுத்தூர் கிராமத்தில் உள்ள அய்யன்குட்டை குளம் மொத்தம் 10.01 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த குளம் முறையாக தூர்வாரப்படாததால் சாக் கடை நீர் தேங்கி கட்டிட இடிபாடுகள் கொட்டப்பட்டு இருந்தது. அந்த குளம் தூர்வாரப்பட்டு தண்ணீர் தேக்கி வைக்கப்படாததால் அருகில் உள்ள பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து கொண்டே போனது.

இந்த நிலையில் தற்போது அந்த குளம் முழுமையாக தூர்வாரப்பட்டு உள்ளது. தூர்வாருவதற்கு முன்பு அந்த குளத்தின் ஆழம் ஒரு மீட்டராக இருந்தது. தற்போது 2½ மீட்டர் ஆழத்துக்கு தூர் வாரியபின்னர் குளத்தின் ஆழம் 3½ மீட்டராக உள்ளது.

தூர்வாருவதற்கு முன்பு அந்த குளத்தில் 47 ஆயிரத்து 605 கனமீட்டர் தண்ணீர் தான் தேக்கி வைக்க முடியும் என்ற நிலையில் இருந்தது. தற்போது கூடுதலாக 37 ஆயிரத்து 416 கனமீட்டர் தண்ணீரை தேக்கிவைக்க முடியும். அந்த குளத்தின் தற்போதைய கொள்ளளவு 85 ஆயிரத்து 21 கன மீட்டராக அதிகரிக்கப்பட்டு உள்ளது.

அய்யன்குட்டையை தூர்வாரியதின் மூலம் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுவதில்லை. ஆனால் சுற்று வட்டார பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். கடந்த டிசம்பர் மாதம் எடுத்த கணக்கின்படி அந்த பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் 26 அடியாக உள்ளது. தென்மேற்கு பருவமழை பெய்து குளத்தில் நீர் நிரம்பினால் நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story