வாக்கு எண்ணிக்கையின்போது அசம்பாவிதங்களை தடுக்க தீவிர ரோந்து பணியில் ஈடுபட வேண்டும்
வாக்கு எண்ணிக்கையின் போது அசம்பாவிதங்களை தடுக்க போலீசார் மாவட்டம் முழுவதும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவிட்டுள்ளார்.
விழுப்புரம்,
நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில், வருகிற 23-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதில் விழுப்புரம் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை விழுப்புரம் கீழ்பெரும்பாக்கத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியிலும், கள்ளக்குறிச்சி தொகுதியில் பதிவான வாக்குகள் கள்ளக்குறிச்சியில் உள்ள ஏ.கே.டி. கல்லூரியில் வைத்தும் எண்ணப்பட உள்ளது.
இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கையின் போது, மாவட்டத்தில் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் ஏற்படாமல் தடுக்கும் விதமாக மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து போலீசாருக்கான ஆலோசனை கூட்டம் விழுப்புரத்தில் உள்ள போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமை தாங்கினார்.
அப்போது அவர் பேசுகையில், வாக்கு எண்ணிக்கையின் போது மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட வேண்டும். பிரச்சினைகள் ஏற்படும் என்று கண்டறியப்பட்டுள்ள கிராமங்களில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும்.
அந்தந்த உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டுகள் அவ்வப்போது ரோந்து பணிகளை மேற்கொண்டு பாதுகாப்பு பணியை பார்வையிட வேண்டும். எந்த ஒரு சிறிய அசம்பாவித சம்பவமும் ஏற்பாடமல் தடுத்து போலீசார் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
இதில் கூடுதல் போலீஸ் சூப்பரண்டு முகிலன், துணை போலீஸ் சூப்பரண்டுகள் தங்கம், மகேஷ், ராமநாதன், திருமால், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் அனைத்து உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story