மலேசியா, துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.41½ லட்சம் தங்கக்கட்டிகள் பறிமுதல்


மலேசியா, துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.41½ லட்சம் தங்கக்கட்டிகள் பறிமுதல்
x
தினத்தந்தி 20 May 2019 4:30 AM IST (Updated: 20 May 2019 1:23 AM IST)
t-max-icont-min-icon

மலேசியா, துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.41½ லட்சம் தங்கக்கட்டிகளை திருச்சி விமான நிலைய அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 3 பயணிகளிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

செம்பட்டு,

திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசியா, சிங்கப்பூர், துபாய், இலங்கை உள்பட வெளிநாடுகளுக்கும், சென்னை, கொச்சி, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கும் நேரடியாக விமானங்கள் இயக்கப்படுகின்றன. அதேபோன்று மறுமார்க்கத்தில் இருந்தும் விமானங்கள் திருச்சிக்கு வந்து செல்கின்றன.

இந்நிலையில் நேற்று அதிகாலை மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு ஒரு விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளின் உடைமைகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது ராமநாதபுரத்தை சேர்ந்த ஹக்கீம் என்ற பயணி தனது உடலில் மறைத்து தங்கக்கட்டிகளை கடத்தி வந்தது தெரிய வந்தது.

இதேபோல துபாயில் இருந்து இலங்கை வழியாக திருச்சி வந்த விமானத்தில் ராமநாதபுரத்தை சேர்ந்த நாகூர், அராபத் ஆகியோரும் தங்கக்கட்டிகளை பசைபோன்ற ஒன்றில் பாலித்தீன் பைகளில் சிறு, சிறு உருண்டைகளாக உடலில் மறைத்து கடத்தி வந்தது கண்டறியப்பட்டது.

3 பேரிடம் இருந்து 1,300 கிராம் தங்கக்கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றின் மதிப்பு ரூ.41½ லட்சம் ஆகும்.

பிடிபட்ட 3 பேரிடமும் தங்கக்கட்டிகள் கடத்தலுக்கு உடந்தையாக இருப்பவர்கள் யார்? என்றும், இதற்காக ஒரு கும்பல் செயல்படுகிறதா? என்ற கோணத்திலும் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story