தேனி நாடாளுமன்ற தொகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 2 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு
தேனி நாடாளுமன்ற தொகுதியில் பலத்த பாதுகாப்புடன் 2 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடந்தது.
தேனி,
தேனி நாடாளுமன்ற தொகுதி பொதுத்தேர்தல், ஆண்டிப்பட்டி, பெரியகுளம் சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த மாதம் 18-ந்தேதி நடந்தது. தேனி நாடாளுமன்ற தொகுதியில் 74.36 சதவீதம் வாக்குகள் பதிவாகின. ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில் 73.44 சதவீதமும், பெரியகுளம் சட்டமன்ற தொகுதியில் 74.25 சதவீதமும் வாக்குகள் பதிவாகி இருந்தன.
இந்தநிலையில் வாக்குப்பதிவின் போது தவறு நடந்ததால், தேனி நாடாளுமன்ற தொகுதியில் 2 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
அதன்படி தேனி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெரியகுளம் சட்டமன்ற தொகுதியில் உள்ள வடுகப்பட்டி சங்கரநாராயணன் நடுநிலைப்பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி எண்-197 மற்றும் ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பாலசமுத்திரம் கிராமத்தில் கம்மவார் சரஸ்வதி நடுநிலைப்பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி எண்-67 ஆகிய 2 வாக்குச்சாவடிகளிலும் நேற்று மறுவாக்குப்பதிவு நடந்தது.
வடுகப்பட்டி வாக்குச்சாவடிக்கு உட்பட்ட பகுதிகளில் 702 ஆண் வாக்காளர்கள், 703 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 1,405 வாக்காளர்கள் உள்ளனர். பாலசமுத்திரம் வாக்குச்சாவடிக்கு உட்பட்ட பகுதியில் 644 ஆண் வாக்காளர்கள், 611 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 1,255 வாக்காளர்கள் உள்ளனர்.
வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பு மாதிரி வாக்குப்பதிவு நடந்தது. வேட்பாளர்களின் முகவர்கள் வாக்குப்பதிவு எந்திரத்தில் வாக்களித்தனர். பின்னர் அவை சரியாக விழுந்துள்ளதா? என்று சரிபார்க்கப்பட்டது. எந்திரங்கள் சரியாக இயங்குவதை உறுதி செய்த பின்னர், மாதிரி வாக்குப்பதிவு விவரங்கள் அழிக்கப்பட்டன. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.
பாலசமுத்திரத்தில் 7 மணிக்கு மக்கள் வாக்களிக்கத் தொடங்கி விட்டனர். ஆனால், வடுகப்பட்டியில் எந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக 15 நிமிடங்கள் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு எந்திரங்களை கட்டுப்பாட்டு கருவியில் சரியாக இணைக்காததால் இந்த தாமதம் ஏற்பட்டதாக கூறப்பட்டது.
வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் வாக்களித்தனர். முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் பலரும் உதவியாளர்கள் உதவியுடன் வாக்குச்சாவடிக்கு வந்தனர். மாற்றுத்திறனாளிகள் சக்கர நாற்காலி மூலம் வாக்குச்சாவடிக்குள் அழைத்து வரப்பட்டனர்.
கைக்குழந்தைகளுடனும் பெண்கள் பலர் வாக்களிக்க வந்தனர். கடுமையான வெயிலை பொருட்படுத்தாமல் கர்ப்பிணிகளும் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர். காலை முதலே வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. வாக்குச்சாவடிகளை நாடாளுமன்ற தேர்தல் பொது பார்வையாளர் உபேந்திரநாத் சர்மா, மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அத்துடன், பெரியகுளம் சட்டமன்ற தொகுதிக்கான பொது பார்வையாளர் சரளாராய், ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கான பொது பார்வையாளர் பிரபாகர ரெட்டி ஆகியோர் வாக்குச்சாவடியிலேயே அமர்ந்து வாக்குப்பதிவு விவரங்களை கண்காணித்தனர்.
வாக்குச்சாவடிகளுக்கு துணை ராணுவ பாதுகாப்பு அளிக்கப்பட்டு இருந்தது. வாக்குச்சாவடி நுழைவு வாயிலில் துணை ராணுவ வீரர்கள் துப்பாக்கி ஏந்திய நிலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதுமட்டுமின்றி வாக்குச்சாவடி வளாகம் மற்றும் தேர்தல் நடந்த வாக்குச்சாவடிக்கு உட்பட்ட பகுதிகளில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடந்தது.
மேலும், வாக்குச்சாவடி வளாகத்திலும், வெளிப்பகுதியில் உள்ள தெருக்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பாதுகாப்பு பணிகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Related Tags :
Next Story