திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு, வீட்டுமனை பட்டா கேட்டு மரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபர்
வீட்டுமனை பட்டா கேட்டு, மரத்தில் ஏறி மிரட்டல் விடுத்த வாலிபரால் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல்,
திண்டுக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று காலை 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் சுற்றித்திரிந்தார். அவர் காதில் ‘ஹெட்செட்’ அணிந்தபடி செல்போனில் பேசியபடி சென்றார். பின்னர் அவர் திடீரென அங்குள்ள ஒரு மரத்தில் ஏறி சேலையை கட்டி முடிச்சு போட்டார். அதை பார்த்ததும் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் எச்சரிக்கை செய்து சத்தமிட்டபடி அவரை பிடிக்க ஓடினர்.
போலீசார் அருகில் செல்வதற்குள், அந்த வாலிபர் மரத்தின் உச்சிக்கு ஏறி சென்று விட்டார். இதையடுத்து வாலிபரை, கீழே இறங்கி வரும்படி போலீசார் அறிவுறுத்தினர். ஆனால், அந்த வாலிபர் மரத்தில் இருந்து கீழே இறங்கி வர மறுத்தார். மேலும், வீட்டுமனை பட்டா கேட்டு பலமுறை மனு கொடுத்தும், அதிகாரிகள் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, வீட்டுமனை பட்டா வழங்கினால் தான் மரத்தில் இருந்து இறங்குவேன், என்றார்.
இதனையடுத்து போலீசார் மரத்தில் ஏறி அவரை மீட்க முயன்றனர். அப்போது, மரத்தில் யாராவது ஏறினால் கீழே குதித்து தற்கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தார். 25 அடி உயரத்தில் உள்ள கிளையில் அவர் அமர்ந்து இருந்தார். இதனால் போலீசார் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதற்கிடையே தகவல் அறிந்த திண்டுக்கல் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் அங்கு விரைந்து வந்தார். பின்னர் அந்த வாலிபரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, வீட்டுமனை பட்டா கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதனை ஏற்றுக்கொண்ட அந்த வாலிபர், 30 நிமிட போராட்டத்துக்கு பிறகு மரத்தில் இருந்து கீழே இறங்கினார்.
அவரை மடக்கி பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், திண்டுக்கல் பாரதிபுரத்தை சேர்ந்த இருதயராஜ் (வயது 31) என்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து போலீசார் அவருக்கு உரிய அறிவுரைகளை கூறி எச்சரித்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story