அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் சொந்த செலவில் சாலை அமைத்த கிராம மக்கள்


அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் சொந்த செலவில் சாலை அமைத்த கிராம மக்கள்
x
தினத்தந்தி 20 May 2019 10:45 PM GMT (Updated: 20 May 2019 8:54 PM GMT)

அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் மணப்பாறை அருகே சொந்த செலவில் கிராம மக்கள் சாலை அமைத்தனர்.

மணப்பாறை,

திருச்சி மாவட்டம், மணப்பாறை நகராட்சிக்குட்பட்ட 3-வது வார்டு சங்கமரெட்டியபட்டி கிராம பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதிக்கு குடிநீர் வசதி, கழிவுநீர் கால்வாய், தெருவிளக்கு, சாலை உள்பட எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை. இதனால், வேதனை அடைந்த கிராம மக்கள் மாவட்ட நிர்வாகம், நகராட்சி நிர்வாகம் என அதிகாரிகள் கவனத்துக்கு பலமுறை கொண்டு சென்றும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

எங்கள் பகுதிக்கு அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என்றால் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அப்பகுதி மக்கள் அறிவித்தனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள் தங்களது கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். அதிகாரிகள் வாக்குறுதியை நம்பி இப்பகுதி வாக்காளர்கள் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.

வாக்களித்து ஒரு மாதம் கடந்தும் இதுவரை எவ்வித அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை. ஆனால், சங்கமரெட்டியபட்டி முன் வரை உள்ள கிராமத்துக்கு தார் சாலை செய்து தரப்பட்டது. சங்கமரெட்டியபட்டிக்கு மட்டும் சாலை அமைக்கப்படவில்லை. இதனால், தங்கள் பகுதி மட்டும் புறக்கணிக்கப் படுவதாக வேதனை அடைந்த மக்கள் இனியும் அதிகாரிகளை நம்பி எந்தபலனும் இல்லை. வாகனங்களில் செல்லும் போது நாம் தான் பாதிக்கப்படுகிறோம். ஆகவே, சுமார் 10 பேருக்கு சொந்தமான இடத்தை பெற்று அதில் 2 கி.மீ. தூரத்துக்கு மண் சாலை அமைக்க முடிவு செய்தனர். இதற்காக கிராம மக்கள் ஒன்று கூடி குறிப்பிட்ட தொகையை சேகரித்து ரூ.1½ லட்சம் செலவில் பொக்லைன் எந்திரம் மூலம் மண்ணை சமப்படுத்தி சாலை அமைத்தனர். சாலை அமைக்கும் பணியில் அந்த பகுதியை சேர்ந்த சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனை வரும் ஈடுபட்டனர். 

Next Story