நாடாளுமன்ற தேர்தல்: மராட்டியத்தில் வாக்கு எண்ணிக்கை ஏற்பாடுகள் தீவிரம்


நாடாளுமன்ற தேர்தல்: மராட்டியத்தில் வாக்கு எண்ணிக்கை ஏற்பாடுகள் தீவிரம்
x
தினத்தந்தி 21 May 2019 12:15 AM GMT (Updated: 20 May 2019 11:07 PM GMT)

மராட்டியத்தில் நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை மறுநாள் எண்ணப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. மும்பையில் 4 மையங்களில் வாக்குகள் எண்ணப்படுகிறது.

மும்பை,

நாட்டின் பிரதமர் நாற்காலியை நிர்ணயிக்கும் 2-வது மிகப்பெரிய மாநிலம் மராட்டியம். இங்கு உத்தரபிரதேசத்துக்கு அடுத்தபடியாக அதிகபட்சமாக 48 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கு 4 கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதன்படி முதல் கட்டமாக கடந்த மாதம் 11-ந்தேதி 7 தொகுதிகளுக்கும், 18-ந்தேதி 10 தொகுதிகளுக்கும், 23-ந்தேதி 14 தொகுதிகளுக்கும், 29-ந்தேதி 4-வது மற்றும் இறுதிக்கட்டமாக மும்பையில் உள்ள 6 தொகுதிகள் உள்பட 17 தொகுதிகளில் தேர்தல் நடந்தது. 48 தொகுதிகளிலும் சேர்த்து மராட்டியத்தில் 60.79 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலை மராட்டியத்தில் ஆளும் பா.ஜனதா- சிவசேனா கூட்டணி ஒரு அணியாகவும், காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் மற்றொரு அணியாகவும் சந்தித்தன. பிரகாஷ் அம்பேத்கர், அசாதுதீன் ஒவைசி ஆகியோர் வஞ்சித் பகுஜன் அகாடி கூட்டணி 3-வது அணியாக களம் இறங்கி இருந்தது. இருப்பினும் பா.ஜனதா- சிவசேனா, காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கூட்டணிகள் இடையே தான் நேரடி போட்டி நிலவியது.

48 நாடாளுமன்ற தொகுதிகளிலும் மொத்தம் 867 வேட் பாளர்கள் போட்டியிட்டு இருந்தனர்.

7 கட்டமாக நடந்த ஜனநாயக திருவிழா முடிந்து விட்ட நிலையில், நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை மறுநாள்(வியாழக்கிழமை) எண்ணப்படுகிறது. அப்போது, மராட்டியத்தில் பதிவான வாக்குகளும் எண்ணி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

குறிப்பாக மாநில தலைநகர் மும்பையில் உள்ள 6 தொகுதிகளில் பதிவான வாக்குகள் 4 இடங்களில் வைத்து எண்ணப்படுகின்றன. இதன்படி வடக்கு மும்பை மற்றும் வடமேற்கு மும்பை ஆகிய தொகுதிகளில் பதிவான வாக்குகள் கோரேகாவ் கிழக்கு நெஸ்கோ காம்ப்ளக்ஸ் கட்டிடத்தின் 4-ம் எண் அரங்கத்தில் எண்ணப்படுகின்றன.

மும்பை வடகிழக்கு தொகுதியில் பதிவான வாக்குகள் விக்ரோலி கிழக்கு பிரோஜ்ஷா நகரில் உள்ள உதயாஞ்சல் பிரைமரி பள்ளியில் வைத்தும், வடமத்திய மும்பை தொகுதியில் பதிவான வாக்குகள் கோரேகாவ் கிழக்கில் உள்ள நெஸ்கோ கண்காட்சி மையத்தில் வைத்தும், தென்மத்திய மும்பை மற்றும் தென்மும்பை தொகுதியில் பதிவான வாக்குகள் சிவ்ரி கிழக்கில் உள்ள நியூசிவ்ரி குடோனில் வைத்தும் எண்ணப்படுகின்றன.

ஓட்டு எண்ணிக்கைக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக இறங்கியுள்ளது. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன.

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடங்களில் டேபிள்கள் அமைப்பது, மின்விளக்கு வசதி, கண்காணிப்பு கேமரா பொருத்துவது உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

நாளை மறுநாள் காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்குகிறது. முதலில் தபால் ஓட்டுகளும் அடுத்து மின்னணு ஓட்டுப் பதிவு எந்திரத்தில் பதிவான ஓட்டுகளும் எண்ணப்படுகிறது. ஒவ்வொரு தொகுதியிலும் விவிபாட் எந்திரங்களில் பதிவான ஓட்டுகளும் எண்ணப்படுகிறது.

Next Story